×

77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு: செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு

புதுடெல்லி: நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் டெல்லி செங்கோட்டையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் விவசாயிகள், செவிலியர்கள், கட்டிட தொழிலாளர்கள் என 1,800 சாமானிய மக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில், பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து தேசியக் கொடி ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார். செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிரிதர் அரமானே ஆகியோர் வரவேற்பார்கள்.

பின்னர், முப்படைகள் மற்றும் டெல்லி காவல் பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பிறகு, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை வழங்கப்படும். அதோடு, இந்திய விமானப்படையின் மார்க்-3 துருவ் என்ற 2 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்படும். மலர் தூவிய பின், நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார். பிரதமரின் உரையின் முடிவில், தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி) தேசிய கீதத்தைப் பாடுவார்கள். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 1,100 என்.சி.சி படையினர் விழாவில் பங்கேற்க உள்ளனர். செங்கோட்டை மலர் அலங்காரங்களின் ஒரு பகுதியாக ஜி20 சின்னம் இடம்பெற்றிருக்கும்.

மேலும், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு தொழில்களைச் சேர்ந்த சுமார் 1,800 பேர் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். ‘மக்களின் பங்களிப்பு’ என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில், 400 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புத் திட்டத்தின் 250 பிரதிநிதிகள்;

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் மற்றும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றில் தலா 50 பங்கேற்பாளர்கள், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உட்பட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் 50 கட்டுமானத் தொழிலாளர்கள்), 50 கதர் தொழிலாளர்கள், எல்லைச் சாலைகள் அமைப்புப் பணி, அமிர்த நீர்நிலைகள் மற்றும் இல்லந்தோறும் குடிநீர் திட்டத்தின் செயல்பாட்டாளர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் தலா 50 பேர் உட்பட 660 க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.

செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவைக் காண ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்தும் 75 ஜோடிகள் தங்கள் பாரம்பரிய உடையில் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி வருவதையொட்டி, செங்கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு படை, சிறப்பு பாதுகாப்பு குழு, மத்திய ஆயுத காவல் படை மற்றும் டெல்லி போலீசார் என 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப் படை நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆகஸ்ட் 16ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் திட்டமிடப்படாத விமா னங்கள் தரையிறங்கவும் புறப்படவும் சில மணிநேரம் தடைவிதிக்கப்படும். செங்கோட்டை மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி உள்ள 300க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தொலைநோக்கியுடன் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் போராட்ட குழுக்கள் டெல்லியில் சுதந்திரத் தினத்தன்று போராட்டம் நடத்தக் கூடும் என்று தெரிகிறது. இதனால், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க எல்லையிலும் வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

*டிபியில் தேசிய கொடி பிரதமர் வலியுறுத்தல்
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசிய கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக ஆகஸ்ட் 13 ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான ‘வீட்டுக்கு வீடு மூவர்ண கொடி’ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக மக்கள் தங்கள் சமூக ஊடகங்களின் முகப்பு புகைப்படமாக (டிபி) தேசியக் கொடியை வைக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இது நமது தேசத்திற்கும் நமக்கும் இடையேயான பிணைப்பை ஆழப்படுத்தும் தனித்துவமான முயற்சி என்றும் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் www.hargartiranga.com என்ற இணையதளத்தில் மூவர்ணக் கொடியுடன் கூடிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

*மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு
மணிப்பூரில் சில தடை செய்யப்பட்ட அமைப்புகள், சுதந்திர தினத்தன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து மணிப்பூரில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்தின் துய்பவுங் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அணிவகுப்பு, ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

The post 77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு: செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : 77th Independence Day ,Cherkotta ,New Delhi ,Modi ,Delhi ,Red Gotte ,Srikkot ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு