திருமலை: சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக நாளை முதல் திருப்பதி மலைப்பாதை வழியே நடந்து செல்ல 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மோட்டார் பைக்குகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் மலையடிவாரமான அலிபிரியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக பாதயாத்திரையாக திருமலைக்கு செல்கின்றனர். இதேபோல் சந்திரகிரி அருகே உள்ள ஸ்ரீவாரி மிட்டா பகுதியில் மற்றொரு படிக்கட்டு வழித்தடமும் உள்ளது.
சந்திரகிரி பகுதியில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஏனெனில் அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். ஆனால் அலிபிரி பகுதியில் 24 மணி நேரமும் பக்தர்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சிறுத்தை, கரடி, யானை அல்லது மலைப்பாம்புகள் கடந்து செல்லும்.
இந்நிலையில் அலிபிரி மலைப்பாதையில் கடந்த ஜூன் மாதம் சிறுவன் ஒருவனை சிறுத்தை கவ்விச்சென்றது. சிறிதுநேரத்தில் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அலிபிரி மலைப்பாதையில் பாதுகாப்புக்காக வனத்துறையினர் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 பேர் வீதம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 6 வயது சிறுமியை வனவிலங்கு கவ்விச்சென்று கொன்றுள்ளது. சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்றதா அல்லது கரடி கொன்றதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இதுபற்றி முழுமையாக தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
நேற்றிரவு வனத்துறையினருடன் தேவஸ்தான உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது அலிபிரி மலைப்பாதையில் இருந்து திருமலை வரை கூண்டுபாலம் அல்லது பசுமை பாலம் அமைப்பது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்ல 15 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அலிபிரி – ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் இனிமேல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படமாட்டாரகள். மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
The post நாளை முதல் திருப்பதி மலைப்பாதை வழியே நடந்து செல்ல 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு அனுமதி ரத்து appeared first on Dinakaran.