×

சுதந்திர தினவிழாவில் முதல்வரின் காவல் பதக்கம் 6 பேருக்கு வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் காவல் பதக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்தாண்டு மே 9ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காகக் கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதல்வரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துரையின் பெயரில் காவல் அதிகாரிகளுக்கு முதல்வரின் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான முதல்வர் காவல் பதக்கம் 6 பேருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல்வர் பதக்கம் குறித்த அறிவிப்பு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி கடந்த ஜூன் 26ம் தேதி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அதன்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் உட்கோட்ட இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் மாவட்டத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றும் குமார் ஆகியோருக்கு முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

மேலும், போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் மதுரை தென் மண்டலக் காவல்துறைத் தலைவரும், தற்போது சென்னை வடக்கு கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வரும் அஸ்ரா கர்க் பணியை அங்கீகரித்து ரொக்கப் பரிசு இல்லாமல் சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விருது மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் காவலர்களுக்கான பதக்கங்களை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சுதந்திர தினவிழாவில் முதல்வரின் காவல் பதக்கம் 6 பேருக்கு வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Tamil Nadu Government ,Chennai ,Dinakaran ,
× RELATED 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில்...