×

4வது போட்டியில் இந்தியா அபார வெற்றி; இன்று கடைசி டி.20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்?

லாடெர்ஹில்:இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் 4வது போட்டி நேற்றிரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 61 (39 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஷாய் ஹோப் 45 (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கைல் மேயர்ஸ 17, பிராண்டன் கிங் 18 ரன் எடுத்தனர். இந்திய பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் சுப்மன்கில், ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கம் அளித்தனர். கில் 30 பந்திலும், ஜெய்ஸ்வால் 33 பந்திலும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 165 ரன் சேர்த்து வெற்றியை நெருங்கிய நிலையில் 16வது ஓவரில் கில் 77 ரன்னில் (47 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆனார். 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 179 ரன் எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 2வது டி.20 போட்டியில் முதல் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 84 ரன் (51 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டநாயகன் விருதுபெற்றார். அவருடன் திலக் வர்மா 7 ரன்னில் களத்தில் இருந்தார். இந்த வெற்றிமூலம் 2-2 என இந்தியா சமன் செய்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி டி.20 போட்டி இதே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

நேற்று வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: கில், ஜெய்ஸ்வால் ஆட்டம் புத்திசாலித்தனமாக இருந்தது. அவர்களின் திறமை மீது எந்தச் சந்தேகமும் கிடையாது. அவர்களின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நாம் முன்னேறி சென்று ஒரு பேட்டிங் குழுவாக பந்துவீச்சாளர்களை ஆதரிக்க வேண்டும். அதிகப் பொறுப்பை பேட்டிங் யூனிட் ஏற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை வென்று கொடுப்பார்கள் என்று நான் எப்பொழுதும் நம்புவேன். நாங்கள் முதல் 2 ஆட்டத்தில் தோற்றோம். முதல் ஆட்டத்தில் கடைசி நான்கு ஓவர்களில் கையில் இருந்த வெற்றியை விட்டுவிட்டோம். டி20ல் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று யாரும் உறுதியாக கிடையாது. நாங்கள் இன்று செய்ததை நாளை திரும்பி வந்து அப்படியே செய்ய வேண்டும், என்றார்.

The post 4வது போட்டியில் இந்தியா அபார வெற்றி; இன்று கடைசி டி.20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்? appeared first on Dinakaran.

Tags : India ,T20 ,Lauderhill ,West Indies ,Lauderhill, Florida, USA ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...