×

பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்க கோரிக்கை நெல்லை அருகே பனை தேசியத்திருவிழா தொடக்கம்: தெலங்கானா கவர்னர் தமிழிசை, ரூபி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு

நெல்லை: பனைத் தொழிலாளர்களுக்கு அரசு காப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை அருகே தருவை பனங்காட்டில் நடந்த பனை தேசியத் திருவிழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். 2023ம் ஆண்டுக்கான இரண்டு நாள் பனை தேசியத் திருவிழா நெல்லை- அம்பை நெடுஞ்சாலையில் உள்ள தருவை பனங்காட்டில் நேற்று தொடங்கியது.

இந்தத் திருவிழாவை நாங்குநேரி எம்எல்ஏ ரூபிமனோகரன், சாமிதோப்பு பாலபிரஜாதிபதி அடிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஒன்றிய அரசு 10 லட்சம் எக்டேரில் பனை விதைகளை நட ஏற்பாடு செய்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 7 ஆயிரம் எக்டேர் நிலங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் பனை விதைகளை அதிகம் நடுவதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும். பனம் பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.

பலர் நார்ச்சத்துள்ள பொருட்களை தேடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பனம் பழத்தை பற்றி தெரியவில்லை. நான் தினமும் பதநீர் பருகுகிறேன். அந்த பதநீர் தான் எனக்கு 24 மணி நேரமும் பணியாற்றும் உத்வேகத்தை அளிக்கிறது. அந்நிய மதுபானங்களை இங்கு விற்கும்போது, உள்நாட்டில் தயாராகும் கள்ளை ஏன் விற்கக் கூடாது? பனைத் தொழிலாளர்களுக்கு அரசு காப்பீடு வழங்க வேண்டும். பனைப் பொருட்களை முதலில் நாம் அதிகளவில் பயன்படுத்த தொடங்குவோம்.

அதன் பின்னர் பனை பொருட்கள் மாநில அளவில், தேசிய அளவில் பிரபலமாகி, உலக அளவில் பிரபலமாகும். விழாக்களில் நவீன குளிர்பானங்கள், காபி, டீ ஆகியவற்றை கொடுப்பதற்கு பதிலாக பதநீர், இளநீர், கருப்பட்டி காபி, சுக்கு காபி ஆகியவற்றை கொடுத்து உபசரிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். பனை பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று’ என்றார்.

முன்னதாக சகா கலைக்குழு சங்கர், தென்னாட்டு சிலம்பாட்ட கழகத்தின் ராமச்சந்திரபாண்டியன் சார்பில் சிலம்பாட்டம், கிங்மேக்கர் அகாடமி சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் பனை பொருட்களில் செய்யப்பட்ட கலைநயம் மிக்க பொருட்கள், பாரம்பரிய விதைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கண்காட்சியை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். இதில் இடம்பெற்ற கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை பலரும் பார்த்து ரசித்தனர். மேலும் பனைமரம் பற்றிய கலைச்செல்வி அச்சங்குன்றம் மாதவியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நிகழ்ச்சியில் பா.ஜ. வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், நெல்லை முன்னாள் எம்பி ராமசுப்பு, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, நெல்ைல நாடார் உறவின் முறை தலைவர் அசோகன், தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாஸ், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் செல்வராஜ், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ், விழா தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராமலிங்கம், பச்சை வாழ்வு இயக்கம் வாழ்வரசி பாண்டியன், இயற்கை வள பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பார்வின், பனை நண்பர்கள் இயக்கம் டாக்டர் ரோகிணி டாப்ராஜா, விழா ஒருங்கிணைப்பாளர்கள் குயிலிநாச்சியார், அசோக்குமார், வீரகுமார், வடிவேல்சுப்பிரமணியன், ரெஜிசிங், சசிகாந்த் சங்கரேஸ்வரன், கடற்கரைகார்த்திக், டைகர்மூர்த்தி, சாமிராஜ், குமரிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாய்மரம் பனை மரம்
விழாவில் சாமிதோப்பு பாலபிரஜாதிபதி அடிகளார் பேசுகையில், தமிழகத்தின் தாய் மரம் பனைமரம். பனை தொழிலை வளர்க்கும் சிந்தனை அரசுக்கு வரவேண்டும். பனைமரத்தின் வேர் முதல் மேல்நுனி வரை அனைத்தும் பயன் உள்ளது. பனையிலிருந்து கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும். பனைத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார். நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் பேசுகையில், யாராலும் பனை மரத்தையும், பனை பொருட்களையும் தவிர்க்க முடியாது. நமது தொன்மையை பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது. பனம்பழம், பனங்கிழங்கு, நுங்கு, பதநீர் உள்ளிட்ட அனைத்து பனை பொருட்களும் உடல் நலத்திற்கு அவசியமானது. பனைத் தொழிலை அரசு தொழிலாக அமைக்க வேண்டும் என்றார்.

The post பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்க கோரிக்கை நெல்லை அருகே பனை தேசியத்திருவிழா தொடக்கம்: தெலங்கானா கவர்னர் தமிழிசை, ரூபி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Palm National Festival ,Nellie ,Telangana ,Governor Tamilisai ,Ruby Manokaran ,MLA ,Nellai ,Darvai ,Panangat ,Palm National Triennial ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...