×

சாகுபடி செலவு குறைவு, கூடுதல் லாபம் புடலங்காய் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம்: 80 நாட்களில் பலன் தர துவங்கும்

தோகைமலை: கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் புடலங்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் புடலங்காய் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து தோகைமலை பகுதி சேகர், கடவூர் பகுதி மாணிக்கம் என்ற முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். இதில் புடலங்காய் கொடி வகையை சேர்ந்த ஒரு வெப்ப மண்டல பயிர். வீட்டுத் தோட்டங்களில் தொங்கும் புடலங்காயின் தாயகம் இந்தியா.

டிரிச்சோசன்தீன் ஆங்கினா என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயர் என்று அழைக்கின்றனர். புடலங்காயில் கொத்துப்புடலங்காய், நாய் புடலங்காய், பன்றிப்புடலங்காய், பேய்ப்புடலங்காய் என்று பல வகை உண்டு. இதில் பேய் புடலங்காய் மிகவும் கசப்பாக இருப்பதால் சமையலுக்கு பயன்படுத்துவது இல்லை. புடலங்காயில் கோ 1, கோ 2, பி.கே.எம் 1, எம்.டி.யூ 1, பி.எல.ஆர் (எஸ்ஜி) 1, பி.எஸ்.எஸ் 694, மைக்கோ குட்டை ஆகிய ரகங்கள் உள்ளது. புடலங்காய் ஒரு வெப்ப மண்டல பயிர் என்பதால் இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது. இரு மண் பாங்கான மண் வகைகள் குறிப்பாக மணல் சாரி, வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றதாகும். இதேபோல் மித வெப்ப மண்டல பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.

புடலங்காய் சாகுபடிக்கு ஜூன், ஜூலை மாதங்கள் மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சாகுபடி செய்தவற்கு ஏற்ற பருவ காலமாகும். புடலங்காய் சாகுபடி செய்யும் நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழவு செய்து கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இடவேண்டும். பின்னர் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் அமைத்து நிலத்தை தயாரிக்க வேண்டும். மேலும் தயார் படுத்திய வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், 45 செ.மீட்டர் ஆழம் மற்றும் அகலம் கொண்ட குழிகளை எடுக்க வேண்டும். தொடர்ந்து அந்த குழிகளில் தொழு உரத்துடன் மேல் மண் கலந்து குழிகளை நிரப்பி வைக்க வேண்டும்.

புடலங்காய் சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ விதைகள் தேவைப்படுகிறது. இந்த விதைகளை நாட்டு மாட்டு சாணத்தில் 24 மணி நேரம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்யலாம். இதேபோல் நாட்டு மாட்டு கோமியத்திலும் 24 மணி நேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்லாம். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதைகள் நடவு செய்த 8 அல்லது 10 நாட்களில் முளைக்க தொடங்கிவிடும். நன்றாக வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

புடலங்காய் சாகுபடி செய்யும் போது ஒரு எக்டேருக்கு அடி உரமாக 20 முதல் 30 கிலோ தழைசத்து, 30 முதல் 50 கிலோ மணிசத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்து கொண்ட உரங்களை இட வேண்டும். இதில் மேல் உரமாக 20 முதல் 30 கிலோ தழைசத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும். இதேபோல் இரண்டு இலை பருவத்தில் எத்ரல் 250 பிபிஎம் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்தால் பெண் பூக்கள் அதிகமாக உற்பத்தி ஆகும். இதே வளர்ச்சி ஊக்கியை ஒரு வாரத்திற்கு 3 முறை தெளிக்க வேண்டும்.

செடிகளை 18 ல் இருந்து 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும். அதன் பிறகு 2 நாட்களுக்கு சாகுபடி செய்யும் வயலை வெயிலில் உலர வைக்க வேண்டும். பின்னர் ஜீவாமிர்தம் தயார் செய்து அதனுடன் 20 கிலோ வேப்பம் புண்ணாக்கை நீரில் கலந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும். 70வது நாளில் ஒவ்வொரு குழிக்கும் 1 கிலோ அளவில் மக்கிய தொழு உரம் போட வேண்டும். இதனால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புடலங்காய் சாகுபடி செய்யும் வயலில் செடிகள் நன்றாக வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு குழியில் 5 விதைகள் நடவு செய்து இருந்தோம். இதில் நன்றாக வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும். பின்னர் புடலங்காய் கொடிகள் வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும். விதைகள் முளைத்து கொடி வரும்போது கொடிகளை மூங்கில் குச்சிகள் அல்லது சவுக்கு குச்சிகளை கொண்டு வயலில் ஊன்று கொடுத்து பந்தல் அமைக்க வேண்டும். பின்னர் வயலில் அமைக்கப்பட்ட பந்தலில் புடலங்காய் கொடிகளை படற வைக்க வேண்டும். 15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் பஞ்சகாவ்யா தெளிக்க வேண்டும்.

தினந்தோறும் காலை நேரங்களில் நான்கு விளக்கு பொறிகளில் உள்ள பூச்சிகளை வடிகட்டி எடுத்து குழிகளில் புதைத்து விடவும். பௌர்ணமி தினம் அன்று அறப்பு மோர் கரைசலை காலை நேரங்களில் தெளித்தால் நல்ல பெண் பூக்கள் மலரும். இதேபோல் வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் உடன் சோப்பு கரைசல் கலந்து 20 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். அதிக வெப்பமும் குளிர் காற்றும் மாறி மாறி வந்தால் புளித்த மோரும், நடுப்பதம் உள்ள இளநீர் கலந்து தெளிக்க வேண்டும். விளக்கு பொறி இனக்கவர்ச்சியினால் தாய் பூச்சிகள் அழிந்து விடும்.

கேஎன்ஓஇக்ஸ்(பிஐஓ மருந்து) 60 நாள் வரை 8 அல்லது 10 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 12 முதல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். விதைகள் ஊன்றிய 80 நாட்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். அதன்பிறகு ஒரு வார இடைவெளியில் 6 முதல் 8 முறை அறுவடை செய்யலாம். ஆகவே மேல் காணும் வழிமுறைகளை பின்பற்றி புடலங்காய் சாகுபடிகளை செய்து வந்தால் ஒரு எக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை புடலங்காய் மகசூல் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post சாகுபடி செலவு குறைவு, கூடுதல் லாபம் புடலங்காய் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம்: 80 நாட்களில் பலன் தர துவங்கும் appeared first on Dinakaran.

Tags : Dogimalai ,Pudalangai ,Karur District Kadavur ,Doghaimalai Union ,Badalangai ,
× RELATED பணப் பட்டுவாடா விவகாரம்; தேமுதிக...