×

மகளிர் உலக கோப்பை கால்பந்து அரையிறுதியில் ஆஸ்திரேலியா: பிரான்ஸ் ஏமாற்றம்

பிரிஸ்பேன்: ஃபிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் கால்பந்து அரங்கில் நேற்று நடந்த காலிறுதியில் ஆஸ்திரேலியா – பிரான்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இடையில் பந்தை கடத்துவதில், கோலடிக்கும் முயற்சியில், தற்காப்பு ஆட்டத்தில் பெரிய வித்தியாசமில்லை. சம பலம் வாய்ந்த இரு அணிகளும் உறுதியுடன் போராடியதால், முதல் பாதியில் மட்டுமின்றி 2வது பாதி ஆட்டத்தின் முடிவிலும் 0-0 என இழுபறி நீடித்தது.

இதையடுத்து, கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. எக்ஸ்ட்ரா டைமிலும் எந்த அதிசயமும் நிகழவில்லை. இரண்டு மணி நேரமாக மல்லுக்கட்டியும் முடிவு கிடைக்காததை தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா 7-6 என்ற கோல் கணக்கில் போராடி வென்று முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸி. அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது அந்த நாட்டின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் போட்டியை நடத்தும் மற்றொரு நாடான நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

முன்னேறியது இங்கிலாந்து: சிட்னியில் நேற்று நடந்த உலக கோப்பை காலிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் லாரென் ஹெம்ப் (45’+7’), அலெசியா ரூஸோ (63வது நிமிடம்) கோல் போட்டனர். கொலம்பியா வீராங்கனை லெய்சி சான்டோஸ் 44வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆக. 16ல் நடக்க உள்ள அரையிறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து அரையிறுதியில் ஆஸ்திரேலியா: பிரான்ஸ் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Australia ,France ,Women's World Cup ,Brisbane ,FIFA Women's World Cup ,Australia's… ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது