×

அறநிலையத்துறையின் கீழ் வள்ளலார் அருள் மாளிகை: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வள்ளலார் அருள் மாளிகையை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலையே தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் சமரச சுத்த சன்மார்க்க சத்ய அறக்கட்டளை மற்றும் விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை நிர்வாக டிரஸ்டி ஜெ.அண்ணாமலை தாக்கல் செய்த மனு: இந்த அமைப்பு தனிப்பட்ட அதிகாரத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில், வள்ளலார் அருள் மாளிகையை இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதற்கு ஒரு அதிகாரியையும் நியமித்து கடந்த 2019ல் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து துறையின் இணை கமிஷனரிடம் முறையிட்டோம். எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் வள்ளலார் அருள் மாளிகை இந்து சமய அமைப்பு அல்ல என்றும் கூறி மீண்டும் மனு தாக்கல் செய்தோம். அந்த மனுவும் கடந்த ஜூலை 3ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மடத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அறநிலைய துறை இணை இயக்குநர் ஜூலை 10ம் தேதி நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து 2வது மேல் முறையீடு மனு தாக்கல் செய்தோம்.

இந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக எங்கள் மடத்தை இந்து சமய அறநிலையத்துறை விழுப்புரம் இணை கமிஷனர் வலுக்கட்டாயமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். எனவே இதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். வள்ளலார் அருள் மாளிகை நடவடிக்கையில் அறநிலையத்துறை தலையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி வள்ளலார் அருள் மாளிகை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். மனுதாரர் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் முறையிடலாம் என்று உத்தரவிட்டார்.

The post அறநிலையத்துறையின் கீழ் வள்ளலார் அருள் மாளிகை: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vallalar Arul House ,Charities Department ,Chennai ,Hindu Religious Charities Department ,Dinakaran ,
× RELATED வடசென்னையில் மழையால் பாதித்த...