×

ஓணம் பண்டிகைக்காக இளம்பிள்ளை பகுதிகளில் சேலைகள் உற்பத்தி தீவிரம்

சேலம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் சேலைகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, திருப்பூர், ஈரோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்பட பல பகுதிகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறிகளில் விசைத்தறியில் ஷாப்ட் சில்க், சுபமுகூர்த்த பட்டு, காட்டன் ஷாப்ட் சில்க், கரீஷ்மா, அபூர்வா, சாமுத்திரிகா பட்டு, கோட்டா காட்டன் பட்டு, மோனா காட்டன், மல்டி கலர் சேலை, எம்போஸ், பிக்கன் பிக் என்று பல்வேறு ரகங்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த சேலைகள் அனைத்தும் பாலியஸ்டர், கோல்டு ஜரிகை, சில்வர் ஜரிகை, காப்பர் ஜரிகை, புளோரா ஜரிகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. காட்டன் ஜவுளிகள், இதைதவிர அபூர்வா பட்டுச்சேலை, சில்க் காட்டன், கேரளா சேலை, வேஷ்டி, லுங்கி, காடா உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து ரகங்களும் இந்தியாவில் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இரு வாரமே இருப்பதால் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் அபூர்வா உள்பட பல ரக சேலைகள் உற்பத்தி செய்யும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. சேலைகளை உற்பத்தியாளர்கள் அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து இளம்பிள்ளையை சேர்ந்த உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஓணம் பண்டிகைக்காக கேரளா முழுவதும், தமிழகத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, செங்கோட்டை, வாளையாறு, குமுளி பகுதிகளில் வசிக்கும் கேரளத்து மக்களும் புத்தாடை அணிவார்கள். இப்பகுதிகளில் அபூர்வா ரக சேலைகளின் விற்பனை களைகட்டும். இதன் காரணமாக சேலை உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம். கேரள பெண்கள் விரும்பி அணியும் சுங்குடி ரக சேலைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். ஒரு சேலை ரூ.300 முதல் ரூ.2500 வரை விற்கப்படுகிறது என்றனர்.

The post ஓணம் பண்டிகைக்காக இளம்பிள்ளை பகுதிகளில் சேலைகள் உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Yumappillai ,Onam festival ,Salem ,Kerala ,Yumappillai district ,Tamil Nadu ,Namakkal ,Yumapillai ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...