×

அதானி நிறுவன முறைகேடு பற்றி செபி வெளியிடும் அறிக்கை சந்தேகத்தை தீர்க்குமா?.. காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: அதானி நிறுவன முறைகேடு தொடர்பாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நாளை வெளியிடப் போகும் அறிக்கை உச்ச நீதிமன்ற நிபுணர் குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமா என காங்கிரஸ் கூறி உள்ளது. அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பல்வேறு மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கூடுதல் அவகாசத்துடன் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆய்வு நடத்தி நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கிடையே, அதானி துறைமுகம் நிறுவனத்தின் கணக்கு தணிக்கை நிறுவனமான டெல்லாய்ட் ஹஸ்கின்ஸ் அன்ட் செல்ஸ் நிறுவனம் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘5 ஆண்டு நியமிக்கப்பட்ட பிரபல கணக்கு தணிக்கை நிறுவனம் ஓராண்டு முடிவதற்குள்ளாகவே பொறுப்பிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை தீவிரமான பல கேள்விகளை எழுப்புகிறது. எனவே செபியின் நாளைய அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த அறிக்கையில், உச்ச நீதிமன்ற நிபுணர் குழு ஏற்கனவே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இருக்குமா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எப்போதுதான் தனது மவுனத்தை கலைப்பார்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post அதானி நிறுவன முறைகேடு பற்றி செபி வெளியிடும் அறிக்கை சந்தேகத்தை தீர்க்குமா?.. காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : SEBI ,Adani ,Congress ,New Delhi ,Securities and Exchange Board of India ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...