×

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ஊழலின் பெரும் பாதிப்புகளை ஏழை மக்களே சுமக்கின்றனர்

கொல்கத்தா: ‘ஊழலின் மிகப்பெரிய பாதிப்பை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களே சுமக்கிறார்கள்’ என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜி20 அமைப்பின் சார்பில் ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசியதாவது:
பேராசை எப்போதும் நம்மை உண்மையை உணர விடாமல் தடுத்து விடும். எனவே பண்டைய இந்திய உபநிடதங்கள் கூட ‘பேராசை வேண்டாம்’ என்பதையே வலியுறுத்தி உள்ளன. நாட்டில் நடக்கும் ஊழலின் மிகப்பெரிய பாதிப்பை ஏழைகளும், விளிம்புநிலை மக்களும்தான் சுமக்கிறார்கள். இது நாட்டின் வள பயன்பாட்டை பாதிக்கிறது. சந்தைகளை சிதைக்கிறது. சேவை வழங்கலை பாதிக்கிறது. இறுதியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது.
நாட்டின் வளங்களை மேம்படுத்தி மக்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமை. இந்த இலக்கை அடைய நாம் ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராட வேண்டும். ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற கண்டிப்பான கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. இதற்காக வெளிப்படையான மற்றும் பொறுப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். மக்கள் நலத்திட்டங்கள், அரசின் திட்டங்களில் உள்ள கசிவும் மற்றும் இடைவெளிகளும் சரி செய்யப்படுகின்றன.

பல்வேறு நலத்திடங்களில் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான நேரடிப் பலன்களை பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.2.7 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை சேமிக்க முடிந்துள்ளது. இ-சந்தை மற்றும் ஜெம் தளம் போன்றவற்றின் மூலம் அரசு கொள்முதலில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் வணிகம் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கி உள்ளோம். இதே போல, பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வெளிநாடு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் ரூ.98,500 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து சுமார் ரூ.15,000 கோடி வரையிலும் பணம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எதிர்க்கட்சிகள் பயந்து ஓடிவிட்டன
மேற்கு வங்கத்தின் கோலகாட்டில் நடந்த பஞ்சாயத்து ராஜ் பரிஷத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பிரதமர் மோடி, ‘‘நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தோம். அதன் மூலம், அவர்கள் பரப்பிய எதிர்மறை எண்ணத்தையும் தோற்கடித்தோம். கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் அம்பலமாகி விடும் என்பதால்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் வாக்களிப்பதை விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் பயந்து ஓடினர். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த விரும்பவில்லை. அவர்கள் அதில் அரசியல் செய்ய விரும்பினர். மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த வன்முறை பயன்படுத்தப்படுகிறது. அதையும் மீறி, உள்ளாட்சி தேர்தலில் ஏராளமான மக்கள் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன், ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சிலர் ஊர்வலம் நடத்தினால் தாக்கப்படுகிறார்கள். இதுதான் திரிணாமுல் காங்கிரஸின் அரசியல்’’ என்றார்.

ரவிதாசிற்கு ₹100 கோடியில் கோயில்
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள தானாவில் சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மீக கவிஞருமான சாந்த் ரவிதாசிற்கு ரூ.100 கோடி மதிப்பில் கோயில் மற்றும் நினைவகம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுகள் ஏழைகளுக்கு தண்ணீர் வழங்கத் தவறிவிட்டன. ஆனால் தலித்துகள், தாழ்த்தப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினப் பகுதிகள் இப்போது ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குழாய் மூலம் தண்ணீரைப் பெறுகின்றன. முந்தைய அரசுகள் இந்தப் பிரிவினரைப் புறக்கணித்து, தேர்தலின் போது மட்டும் அவர்களை நினைவில் வைத்தன. ஆனால் தலித்துகள், ஓபிசி மற்றும் பழங்குடியினருக்கு எங்கள் அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. கொரோனா காலத்தில் யாரும் வெறும் வயிற்றில் தூங்கக்கூடாது என்று முடிவு செய்து அறிவித்த இலவச ரேசன் திட்டம் உலகத்தால் பாராட்டப்படுகிறது. இவ்வாறு பேசினார்.

The post ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ஊழலின் பெரும் பாதிப்புகளை ஏழை மக்களே சுமக்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Modi ,G20 speech scandal ,Kolkata ,G20 ,Dinakaran ,
× RELATED அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த...