×

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார்: அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருதும் வழங்குகிறார்

சென்னை: நாட்டின் 76வது சுதந்திர தினம் 15ம் தேதி (நாளை மறுதினம்) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். விழா மேடையில், `தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் தலைவர் கி.வீரமணிக்கு வழங்குகிறார்.

டாக்டர் அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிப்பார். முன்னதாக, காலை 8.45 மணிக்கு 76வது சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார்.

முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார். இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வர் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து தேசியக்கொடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்தவார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.

* ‘யானைகளை பாதுகாப்போம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற கானுயிரைக் காக்க நமது அரசு உறுதிபூண்டுள்ளது. அகத்தியமலை யானைகள் காப்பக அறிவிப்பு, இரு யானை முகாம்கள் மேம்படுத்தல், சிதைந்த காடுகளை மீளுருவாக்கம் செய்து மீட்டெடுப்பது, யானைப் பாதுகாவலர்களின் நலன் காப்பது, வனத்துறை நவீனமயம், தெர்மல் கேமராக்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் யானைகள் கண்காணிப்பு உள்ளிட்ட புதுமையான தீர்வுகள் என யானைகளைக் காப்பதில் உறுதியாக இருக்கிறோம். கோயம்புத்தூரில் நடந்து வரும் யானைகள் பாதுகாப்பு மாநாடும் இதனை மேலும் வலுப்படுத்தும். அனைவரும் இணைந்து உருவத்தால் பெரிய இந்த அழகிய உயிரினத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்’’ என கூறியுள்ளார்.

The post நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார்: அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருதும் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,76th Independence Day ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,
× RELATED உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!