×

தமிழ்நாடு சட்டசபை நிகழ்வை திரித்து பேசிய நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கண்டனம்: பிரதமர் மோடிக்கும் பதிலடி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளாரே. இது குறித்த உங்கள் கருத்து? பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. 3 நாட்களாக பாஜ அரசு மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு பிரதமரால் நேரடியாக பதில் சொல்லவில்லை.

மாறாக, தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார். காங்கிரஸ் கட்சி மீது 9 ஆண்டுகளுக்குப் முன்பு வைத்த வைத்த குற்றச்சாட்டையே இப்போதும் வைத்துள்ளார். பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து ‘எதிர்க்கட்சித் தலைவர்’ மோடி பேசுவதைப் போல இருக்கும். பாஜக ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அதிமுக. இப்போது அதிமுகவை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா? ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின்’சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறாரே?

நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது. தமிழ்நாடு ஆளுநருக்கும் உங்களுக்குமான மோதல் தீவிரமடைந்துள்ளது பற்றி சொல்லுங்க?

இன்றைய ஆளுநர் மாளிகைகள், பாஜ அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். ‘எனக்கு வேலையே இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார். செந்தில்பாலாஜி ஏன் இன்னும் அமைச்சராக தொடர்கிறார்? பாஜ தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது. பாஜவின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும். அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பாஜவில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன.

எனவேதான் இவர்களது கைதுகளைக் ‘குற்ற விசாரணைகள்’ என நாங்கள் பார்க்கவில்லை. ‘அரசியல் விசாரணைகள்’ ஆகத் தான் பார்க்கிறேன். அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில்பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது. கூட்டாட்சி வடிவத்தையும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலையும் ஒன்றிய அரசு சிதைக்கிறது என சி.பி.ஐ., அமலாக்கத்துறை நடவடிக்கைகளை வைத்து நீங்கள் கூறுவது ஏன்? பாஜவுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில் பாஜ உறுதியாக இருக்கிறது. அனைவரும் பிரிந்து நின்றால்தான் பாஜவுக்கு லாபம். எனவேதான் அனைவரையும் ஒன்று சேர்க்காமல் இருக்கவே இது போன்ற (சி.பி.ஐ, ஈ.டி) ரெய்டுகள் செய்யப்படுகின்றன. அச்சுறுத்துவது, பயமுறுத்துவதுதான் இந்த ரெய்டுகளின் நோக்கமாகும்.

நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. அதுபோல எதிர்க்கட்சிகள் தங்களுடைய பிரதமர் முகம் யார் எனக் கூறித் தேர்தலை எதிர்கொள்ளுமா? நரேந்திர மோடி என்ற பிம்பம் இன்று தகர்ந்துவிட்டது. எனவே, அவர் முகத்தை மட்டும் காட்டி பாஜவால் வெற்றி பெற முடியாது. அதனால்தான் 39 கட்சிகளைக் கூட்டி வைத்து அவர் போஸ் கொடுத்தார். ஏன், அவர் தன் இமேஜை நம்பவில்லை? காங்கிரஸையும் ராகுலையும் திமுகவையும் மற்ற எதிர்க்கட்சிகளையும் மோடி விமர்சித்துப் பேசுவது இதனால்தான். பொது சிவில் சட்டம் பற்றிய உங்கள் பார்வை என்ன? தமிழ்நாட்டில் பா.ஜ.வுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வும் இதனை எதிர்த்துள்ளது பற்றிய உங்கள் கருத்து என்ன? பொது சிவில் சட்டம் என்பது பண்பாட்டு, கலாசாரம், பழக்க வழக்கங்களில் ஒன்றிய அரசு கை வைக்கிறது.

இந்தியாவில் பல்வேறு பண்பாடு, கலாசார, பழக்க வழக்கங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கிறார்கள். எனவே இங்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு பழங்குடி சமூகங்கள், சிறுபான்மையினருக்குத் தனிச் சலுகைகள் வழங்கி இருக்கிறது. அவர்கள் பொது சிவில் சட்டம் என்று கூறப்படுவதை எதிர்க்கிறார்கள். காசி ஹில்ஸ் என்ற தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில் இதனை எதிர்த்துள்ளது. அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சிறப்பு சலுகை பெற்றிருக்கும் சமூகம் இது. எனவே, பொது சிவில் சட்டமானது, இந்தியாவின் பொது அமைதியையும் இணக்கத்தையும் சீர்குலைத்துவிடும் சட்டம் ஆகும். தமிழ்நாடு அரசு முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நீங்களும் பல மாவட்டங்களில் தொழில் மையங்களை அமைத்து வருகிறீர்கள்.

ஆனால், இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை உள்ள சூழலில், நாட்டில் முதலீட்டுச் சூழல் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி எந்த மந்தநிலையும் இல்லை என்றே சொல்வேன். அப்படி நினைத்திருந்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் சென்னையில் வரும் ஜனவரி மாதம் கூட்டி இருக்க மாட்டோமே. இதற்கு அழைப்பு விடுக்க ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்துப் பேசிய முதலீட்டாளர்கள் பலரும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார்கள். அமைதியான மாநிலம், சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் எனத் தமிழ்நாட்டை நினைக்கிறார்கள்.

இந்த வாரம் கூட, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை செங்கல்பட்டில் நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளோம். 515 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் ஆலை அது. மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் 1,891 கோடி ரூபாய் முதலீட்டில் ஏ.சி இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலைகள் அமைக்க கடந்த மே 9 அன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் மே 11-ஆம் தேதி கையெழுத்தானது. பொன்னேரியில் மஹிந்திரா ஒரிஜின்சில் புதிய ஆலையை அமைப்பதற்கான பணிகளை ஓம்ரான் நிறுவனம் தொடங்கியுள்ளது.

கடந்த மூன்று மாதத்தில் தொடங்கப்பட்ட ஒரு சில நிறுவனங்கள் இவை. எனவே நீங்கள் சொல்லும் மந்த நிலைமை நம் மாநிலத்துக்கு இல்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர், மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடு அவர் பக்கம் இருப்பதாகவும் பேசியுள்ளார். மணிப்பூரில் தொடரும் வன்முறைக்குத் தீர்வுகாண நீங்கள் சொல்லும் வழி என்ன? பாஜவின் பிளவுவாத வெறுப்பரசியல் தான் மணிப்பூர் பற்றி எரிவதற்குக் காரணம். இரண்டு பிரிவினருக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது பாஜவின் மதவாத அரசியல் ஆகும். இன்று அவர்கள் அடக்க முடியாத அளவுக்கு கைமீறிப் போய்விட்டார்கள்.

மணிப்பூரில் இப்படி நடக்கும் என்பது அந்த மாநிலத்தை ஆளும் பாஜ அரசுக்கும் தெரியும். ஒன்றிய பாஜ அரசுக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிதாக நடக்கும் என்று அவர்கள் கணிக்கவில்லை. வன்முறை இருபக்கமும் கூர்மையான ஆயுதம். ‘பூதத்தை உருவாக்கினால், அந்த பூதம் உருவாக்கியவனேயே தாக்கும்’ என்பார்கள். அதுதான் மணிப்பூரில் நடக்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் பாதிக்கப்பட்ட மக்களைப் போய் பிரதமர் பார்க்க வேண்டும். இத்தனை நாட்களாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல்களைச் செய்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம் அதனை அணைத்து விட முடியாது.

பாஜ தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துவதைப் பிரதமரின் சமீபத்திய பேச்சுகளில் நன்கு காண முடிகிறது. மாநில அரசியலில் அ.தி.மு.க.வுக்குப் பதிலாக பா.ஜ.க உங்களது முதன்மை எதிர்க்கட்சியாக வர வாய்ப்புண்டா? நல்ல நகைச்சுவையான செய்தி இது. பிரதமரிடம் எவ்வளவு பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பிரதமருக்குத் தமிழ்நாட்டைப் பற்றியும் தெரியவில்லை. தமிழக பாஜவைப் பற்றியும் தெரியவில்லை என நினைக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு சட்டசபை நிகழ்வை திரித்து பேசிய நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கண்டனம்: பிரதமர் மோடிக்கும் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Stalin ,Nirmala Sitharaman ,Tamil Nadu Assembly ,Modi ,Chennai ,Union Minister ,Parliament ,Chief Minister ,Muhammala Sitharaman ,G.K. Stalin ,PM Modi ,
× RELATED அமலாக்கத்துறை நடவடிக்கையால்...