×

5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம்

டெல்லி: சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பாஜ, காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் இதில் பலத்தை நிரூபிப்பதோடு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் சார்பாக 5 மாநில தேர்தலில் பாஜவை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இது தொடர்பாக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 5 மாநில தேர்தல் பிரசாரத்தை சட்டீஸ்கரில் இருந்து தொடங்குகிறார். சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.

தொடர்ந்து 18ம் தேதி தெலங்கானாவிலும், 22ம் தேதி மத்திய பிரதேசத்தின் போபாலிலும், 23ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்பூரிலும் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொள்கிறார். சுற்று பயணத்தின்போது அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை நடத்துகிறார். இதில், அந்தந்த மாநிலங்களில் நிலவும் முக்கிய அடிப்படை பிரச்னைகளை எப்படி தீர்ப்பது, தேர்தலில் எந்தமாதியான வாக்குறுதிகளை அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கிறார்.

கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கையாண்ட யுக்தியை 5 மாநில தேர்தலிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post 5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Malligarjune Karke ,5th state Assembly election ,Delhi ,Sattiskar ,Madhya Pradesh ,Rajasthan ,Telangana ,Mizoram ,Mallikarjune Karke ,state Assembly election ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...