×

எனக்கென்று எதுவும் வேண்டாம்…பட்டாபிராமர் பூஜைக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆடி திருவாதிரை – 12.8.2023

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் புவனகிரி. அருமையான பல திருத்தலங்களுக்கு இடையிலே அமைந்த ஊர். ஒரு பக்கம் பிரசித்தி பெற்றவராகப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமுஷ்ணம். ஒரு பக்கம் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டின் தலைவாசலாக விளங்குகின்ற தில்லை திருச்சித்ரகூடம். இன்னொரு பக்கம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் அவதாரம் செய்த மருதூர். இப்படிப் பல அற்புதமான மகான்களின் தொடர்புடைய தலம் புவனகிரி. புவனகிரியில் அவதரித்தவர்தான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இந்த ஊர், வராக தலம் என்று சொல்லலாம். ஒரு பக்கம் ஆதிவராக நல்லூர் என்கிற ஊரும், ஒரு பக்கம் ஆதிவராக நத்தம் என்கிற ஊரும் இருக்க, இடையில் உள்ள ஊர்தான் புவனகிரி. வெள்ளாற்றங்கரையில் உள்ளது.

வெள்ளாறு என்பது புராணப் பிரசித்தி பெற்ற நதி. சுவேத நதி என்று சொல்வார்கள். இந்த நதியின் பெருமையை திருமங்கையாழ்வார் ‘‘நிவா வலங் கொள் தெய்வப்புனல்’’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த சுவேத நதியின் ஒரு கரையில் புவனகிரியும், மற்றொரு கரையில் கீரப்பாளையம் என்கின்ற ஊரும் இருக்கிறது. பல புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், மகான்கள், நாவலர்கள் அவதரித்த ஊர் இந்த ஊர். நெசவுத் தொழிலுக்கு மிக பிரசித்தி பெற்றது.

இப்படிப்பட்ட ஊரில் வைணவ மரபில் அவதரித்தவர்தான் “புவனகிரி அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கிசுவாமிகள்’’. பிறந்த ஆண்டு 1860, ஆடி மாதம் 4-ஆம் தேதி, தேய்பிறை சதுர்த்தசி திதி, திருவாதிரை. இவருடைய தந்தையார் பெயர் கஸ்தூரி சின்னைய நாயுடு. இவருடைய இயற்பெயர் அரங்கசாமி. திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் விவசாயமும், பின்னாட்களில் ஜவுளித் தொழிலும் செய்தார்.

மிகச் சிறந்த குரல் அமைப்பும், கீர்த்தனைகள் தமிழிலும் தெலுங்கிலும் இயற்றிப் பாடும் திறமை இருந்தது. பகவானை நினைத்து சதா சர்வ காலமும் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருந்தார். தனக்கு ஒரு அறை அமைத்துக் கொண்டு, அதில் தம்புரு, மிருதங்கம், ஜால்ரா முதலில் இசைக் கருவிகளோடு அற்புதமாக பஜனை பாடும் இவரோடு, ஊராரும் சேர்ந்து கொண்டனர். ஒருமுறை, வைணவத்தில் மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த வித்வானாகத் திகழ்ந்த “புதுவை விலட்சணகவி  ராமானுஜ நாவலர் சுவாமிகள்’’ கீரப்பாளையம் வந்தார். இவரை சில பாடல்களும், கவிகளும் வாசிக்கச் சொல்லிக் கேட்டார். இவருடைய கீர்த்தியை தெரிந்து கொண்டு, சிஷ்யராக ஏற்றுக் கொண்டு பாடம் கற்பித்தார்.

இவருடைய கவி ஆற்றலையும், இலக்கண அறிவையும், வைணவப்புலமையையும் கண்டு, இயற்பெயரான அரங்கசாமி பெயர் மறைந்து அழகிய மணவாளதாசர் என்ற பெயர் பிரசித்தி ஆயிற்று. எப்பொழுதும் பகவான் பெருமையைப் பாடி, பஜனை, சொற்பொழிவு என்று இருந்ததால் குடும்பத்தைக் கவனிக்க முடியாமல், இவர் செய்து வந்த ஜவுளி வியாபாரத்தில் பற்றாக்குறையும் நஷ்டமும் வந்தது. ‘‘தாம் உலகியலில் இருந்து விலகி முற்றிலும் இறைப்பணியில் ஈடுபடுவதற் காகவே வணிகத்தில் தமக்குபெருமாள் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார். இனி நாம் வேறு வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று நினைத்தார் சுவாமிகள்.

பஜனை பாடினால் நம்மூரில் உள்ளவர்கள் மட்டும்தான் உய்வு பெறுவார்கள். எனவே, நாம் பல ஊர்களுக்கும் சென்று, இசையோடு ஹரி கதை செய்து, எல்லா மக்களையும் பக்தியில் ஈடுபடச் செய்வோம் என்று உறுதி ஏற்றுக் கொண்டார். விப்ர நாராயண சரித்திரம், கூரத்தாழ்வார் சரித்திரம், ருக்மாங்கத சரித்திரம், பிரகலாத சரித்திரம் ஆகியவற்றை உரைநடையிட்ட, செய்யுள்களாக, தானே இயற்றி ஆங்காங்கே சென்று ஹரிகதை செய்து வந்தார்.

அதன் பிறகு பாரதம், ராமாயணம், பாகவதம் ஆகியவற்றை கையேடு படிப்பதற்கு ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு பிரசங்கம் புரிந்து வந்தார். அப்பொழுது புவனகிரியில் சப் – மேஜிஸ்ட்ரேட் கோர்ட் இருந்தது. அதில், தாமோதரன் என்பவர் சப் – மேஜிஸ்ரேட்டாக உத்தியோகம் வகித்து வந்தார். அவர் தன்னுடைய இல்லத்தில் கம்பராமாயணம் சொல்ல வேண்டும் என்று இவரைக் கேட்டுக் கொண்டார். அவர் விரும்பியபடி கம்பராமாயணத்தை முறையாகச் சொல்லி முடிக்க, இவர் பாடும் முறையிலும், அதில் உள்ள நுட்பமான கருத்துக்களை எல்லாம் மனம் கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் முறையிலும், மனதை பறிகொடுத்த சப்மேஜிஸ்ரேட் தாமோதரன், நிறைவு நாளன்று பெரிய பொன்முடிப்பைத் தருவதற்கு ஏற்பாடு செய்தார்.

அதனை மறுத்த ஏகாங்கி சுவாமிகள், “தமக்கு எந்த பொருளும் வேண்டாம்; ஊரில் உள்ள பட்டாபிராமர் சந்நதிக்கு கால பூஜை தடைஇல்லாமல் நடைபெறுவதற்காக போதிய நிலத்தை சாஸ்வதமாகத்தந்தால் போதும்” என்று சொல்ல, அப்படியே இரண்டு ஏக்கர் நஞ்சை நிலத்தையும், ஒரு சிறிய நீர்நிலையையும், அதன் பக்கத்தில் ஒரு தோப்பினையும் பட்டாபிராமர் சந்நதிக்கு உரிமையாக்கி பட்டா செய்துவைத்தார்.

அந்த பட்டாபிராமர் மீது அழகிய மணவாள தாசர் ஒரு அருமையான பதிகமும் பாடி இருக்கின்றார். ஒரு முறை அவர் வானமாமலை மடத்து, ஜீயர் சுவாமிகளை சந்திக்கும்பொழுது அவர் சொன்னார்;‘‘இப்படியே ஹரிகதை, பஜனை என்று இருப்பது நல்லதுதான். ஆனால், நீங்கள் வைணவத்தினுடைய தத்துவ விளக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஆன்ம உண்மையை அறிந்து மோட்சம் பெறலாம்.

அதோடு இந்த உண்மையை நீங்களும் உணர்ந்து மற்றவர்களுக்கும் சொல்லலாம்’’ என்று உபதேசம் செய்தார். உடனே அதனை ஏற்றுக்கொண்ட சுவாமிகள், பெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் திருவடிகளைச் சேவித்து, அவர் மூலம் `திருவேங்கடாச்சாரியார்’ என்கிற ஆச்சாரியரை அடைந்து, அவர் மூலமாக மிக முக்கியமான வைணவ ரகசிய நூல்களையும், தத்துவ
நூல்களையும் பயின்றார்.

வடமொழி கலந்த மணி பிரவாள நடையில் இருந்ததாலும், நிறைய வடமொழி ஸ்லோகங்கள் கலந்து இருந்ததாலும், தெளிவான மொழி அறிவைப் பெறுவதற்காக அவரே வடமொழியையும் இவருக்கு பயிற்றுவித்தார்.ஆழ்வார்களின் அருளிச்செயலை முறையாக இவருக்குப் பாடம் சொன்னார். இதற்குப் பிறகு சுவாமியினுடைய பெருமை இன்னும் பரவியது. ஆழ்வார்கள், பாடல்களுக்கு அற்புதமாக உரையாற்றினார். அப்பொழுதெல்லாம், ஒரு சமயம் ஏற்றம் பெறும் பொழுது, அதனை குறைகூறி பலர் நூல் எழுதி வெளியிடுவதுண்டு. அப்படி வைணவ சமயத்துக்கு எதிரான நூல்கள் வரும்போது, அதற்கு தக்க விளக்கங்கள் அளித்து, மறுப்புரை எழுதும் பழக்கம் சுவாமிகளிடம் இருந்தது.

சிலநேரங்களில் தர்க்க சித்தாந்த விவாதங்களும் நிகழ்த்தியதுண்டு. பழைய தென்னார்க்காடு மாவட்டமாகிய கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் முதலிய பகுதிகளைச் சேர்ந்த பல ஊர்களுக்கும் இவர் சென்று வைணவ சமய நெறியைப் பரப்பி ஆங்காங்கு பல சிஷ்யர்களைப் பெற்றார். தமக்கு வருகின்ற பொருளை தம்மோடு வருகின்ற சிஷ்யர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்.

‘‘நீங்கள் என்னோடு வந்துவிட்டால் உங்கள் குடும்பத்திற்கு என்ன செய்வீர்கள்?’’ என்று தமக்கு வருகின்ற பொருளை அந்தந்த ஊரில் உள்ள சிஷ்யர்கள் வீடுகளிலும் அவர் கொடுத்துக் கொண்டே செல்வது வியப்பான ஒரு செய்தியாகும். அவர் காலத்தில் பற்பல அதிசயங்களும் நடைபெற்றன. பலரும் இவரிடம் பஞ்ச சம்ஸ்காரமும் செய்து கொண்டார்கள்.

வைணவ தத்துவ சித்தாந்த அனுஷ்டான நுட்பங்களை எல்லாம் விளக்கி, வினாவிடை அமைப்பில் `வைஷ்ணவ தீபிகை’ என்கிற நூலை எழுதி வெளியிட்டார். அர்த்த பஞ்சகநூலையும் வெளியிட்டார் சுவாமிகள். ஒவ்வொரு வருடமும் திருவரங்கத் திருத்தலத்திற்கு மார்கழி உற்சவத்திற்கு எழுந்தருளுவது வழக்கம்.

அப்பொழுது வைணவ சமயத்தை நன்கு பரப்புவதற்காக ஒரு கல்விச்சாலையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். “ராமானுஜ தர்சன வித்யாசாலை” என்கின்ற ஒரு அமைப்பை, மற்ற சில தனவந்தர்களோடு இணைந்து, நெகமம் ஜமீன்தார் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்து தொடங்கினார். அந்த பள்ளிக்கூடத்தில் படித்தவர்தான் வைணவத்தில் பெரும் புலமை பெற்றவரும், ஈட்டின் தமிழாக்கம் செய்தவரும், மிகச் சிறந்த தமிழ் அறிஞருமான பு.ரா.புருஷோத்தம நாயுடு அவர்கள்.

அவர் ஏகாங்கி சுவாமிகளின் தம்பி குமாரர். ஆனால், இந்த பள்ளிக்கூடத்தை ஓராண்டுகூட முறையாக நடத்த முடியவில்லை. அதனால், இந்த பள்ளிக்கூடத்தை அவர்கள் சிதம்பரம் அதாவது தில்லை திருச்சித்ரகூடத்திற்கு மாற்றினார்கள். தில்லை திருச்சித்ர கூடத்தைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து, பல பக்திமான்களைவரவழைத்து, அவர்களுடைய ஆதரவுடன் சிதம்பரத்தில் பள்ளிக்கூடம் மாற்றப்பட்டது.

இப்படி பற்பல வகையில் தமிழ்ப்பணி, உபன்யாசப்பணி, பாடல்கள் இயற்றுதல், பற்பல ஊர்களிலும் சீடர் குழாமை உருவாக்கி அவர்களுக்கு போதனைகள் செய்தல், வித்யாசாலை நடத்துதல் எனச் செய்துவந்த `அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகள்’, 1926-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு எழுந்தருளி ஒரு மடத்தை ஏற்படுத்தினார்.

மணவாள மாமுனிகள் மடம் என்ற பெயருள்ள அம்மடத்தில் தங்கியிருந்தார். வைணவ சமயத்தை வளர்த்துக்கொண்டு அங்கு தங்கியிருந்த சுவாமிகள், 1927-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை, இரவு நாலு மணிக்கு ஏகாதசி அன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவருடைய திருவரசு பெரும்புதூரில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவாதிரை அன்று, அவர் அவதரித்த புவனகிரியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவர் ராமாயணம் சொன்ன பட்டாபிராமர் கோயிலில் அவருடைய திருஉருவச் சிலை அமைந்திருக்கிறது.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post எனக்கென்று எதுவும் வேண்டாம்…பட்டாபிராமர் பூஜைக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் appeared first on Dinakaran.

Tags : Bhattabraham ,Puja ,Kunkum Anmikam Aadi Tiruvadhirai ,Bhuvanagiri ,Cuddalore district ,Tamil Nadu ,Pattabramar ,
× RELATED வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்