×

பெரம்பலூரில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

 

பெரம்பலூர், ஆக. 12: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (11ம்தேதி) காவல் துறை சார்பில் நடைபெறும் \”போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழாவில், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நேற்று(11ம்தேதி) நடைபெற்றது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் சென்னையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன எல்.இ.டி வீடியோ வாகனத்தின் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பெரம்பலூரில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Kalaivanar Arena ,Chennai ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...