×

கும்பகோணம் கோயில் திருவிழாவில் பரபரப்பு: கதண்டுகள் கடித்ததில் 24 பேர் படுகாயம்

 

கும்பகோணம், ஆக. 12: கும்பகோணம் அருகே வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவின் போது வாணவேடிக்கை நடத்தப்பட்டதால் கதண்டுகள் பறந்து வந்து 6 குழந்தைகள் உட்பட 24 பேரை கடித்தது. மயங்கி விழுந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே துரும்பூர் ஊராட்சி, வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவில் திருவிழாவில் பால்குடம் காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணியாற்று பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வாணவேடிக்கை நடத்தப்பட்டது.

அந்த நேரத்தில் அரசமரம், மா மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் பறந்து வந்து பால்குடம் எடுக்க காத்திருந்த சுவாமிமலை கலைஞர் காலனி சதாசிவம் மகன் சச்சின் (17), சோமலிங்கம் மகன் ஜெய்சிங் (46), சுவாமிமலை பேரூராட்சி ஊழியராக பணியாற்றி வரும் இவரது குழந்தைகள் சாதனா (12), சசிமிதா (8), ஜெயஸ்ரீ (5), மேலும் பிரசாத் மகன் ஹரிஹரன் (8), ஷங்கர் மகன் ஜெயக்குமார் (18), சுந்தர்ராஜ் மகன் பாலமுருகன், சுப்ரமணியன் மகன் தினேஷ்குமார் (22) என ஆறு குழந்தைகள் உட்பட 24 பேர்களை விஷக்கதண்டு கடித்தது.

கதண்டு கடித்த அனைவரும் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் ஏற்றி அருகில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கும்பகோணம் கோயில் திருவிழாவில் பரபரப்பு: கதண்டுகள் கடித்ததில் 24 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam temple festival riots ,Kumbakonam ,Balkuta festival ,Veerancheri ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...