×

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம், ஆக.12: ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, சேலத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். சேலத்தை பொறுத்தவரை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா களை கட்டும். அதன்படி நடப்பாண்டு திருவிழா நடந்து வருகிறது. இதனிடையே ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில், நேற்று கடைசி வெள்ளியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்ககவசம் சாத்துப்படி நடந்தது. தொடர்ந்து, காலை முதலே திரண்ட பக்தர்கள், நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். பின்னர், பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் வைத்து பிரசாதங்களை வழங்கினர்.

ஆடி வெள்ளியையொட்டி, நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோயிலில், மூலவருக்கு ரத்தின அங்கி அணிவிப்பு செய்யப்பட்டது. அத்துடன் மாவிலை, தென்னை கீற்று மற்றும் வாழை இலையால் செய்யப்பட்டிருந்த அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல், குமாரசாமிப்பட்டி எல்லப்பிடாரியம்மன் கோயிலில் தாலிக்கயிறு மற்றும் வெள்ளி கவச அலங்காரமும், சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மனுக்கு ராஜசபையில் மாங்கல்ய அலங்காரமும் செய்யப்பட்டு பக்தர்களின் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாப்பேட்டை பலப்பட்டரை மாரியம்மன், செங்குந்தர் மாரியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், உள்பட மாநகரில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

The post அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Salem ,Aadi ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை