×

மயிலாடுதுறை அருகே விநோதம் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலை மற்றும் தெரு ஓரத்தில் வேம்பு, புளியமரம், தென்னைமரம் ஆகிய மரங்கள் உள்ளன. இங்கு வருடந்தோறும் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தனது குஞ்சுகளுடன் பறந்து சென்று விடுகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பெரம்பூர் கிராமத்திற்கு நத்தைகொத்தி நாரை, கொக்கு, நாரை, பாம்புத்தாரா உள்ளிட்ட அபூர்வ வகையான பறவைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வருடந்தோரும் ஆகஸ்ட் மாதம் வந்து இங்கு உள்ள மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன.மரங்களில் இந்த பறவைகள் கூடு கட்டும்போது ஆண் மற்றும் பெண் இரண்டு பறவைகளும் சேர்ந்து கூடு கட்டுகின்றன. முட்டை இட்டவுடன் முட்டைகளை பறவைகள் அடைகாக்க தொடங்குகின்றன. பெண் பறவை அடை காப்பதற்காக கூடுகளில் தங்கியிருக்கின்றன. அந்த நேரத்தில் ஆண் பறவைகள் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று இரையை எடுத்து வந்து பெண் பறவைக்கு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றன. குஞ்சுகள் ஓரளவுக்கு வளர்ந்து பறக்கும் வரை ஆண் மற்றும் பெண் பறவைகள் பாதுகாப்பாக வளர்த்து வருகின்றன.பறக்கும் நிலைக்கு வந்தவுடன் இரண்டு பறவைகளும் தனது குஞ்சுகளையும் அழைத்துக்கொண்டு பறந்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிடுகின்றன. ஒரு வருடம் முடிந்த பிறகு அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் இப்பகுதிக்கு வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து கொண்டு டிசம்பர் மாத வாக்கில் மீண்டும் தாயகத்திற்கு திரும்பும். இதை இப்பகுதி மக்கள் அபூர்வ நிகழ்வாக கருதுகின்றனர்.இந்த பெரம்பூர் கிராமத்தில் வேதாரண்யம் மற்றும் வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் கொக்கு, மடையான், காகம் மற்றும் நீர் காக்கைகள் உள்ளிட்ட உள்நாட்டு பறவைகள் வந்து தங்கி கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து கொண்டு தாயகத்திற்கு திரும்பி விடுகின்றன. மீண்டும் இதேபோல் இனப்பெருக்க காலத்தில் பெரம்பூர் கிராமத்திற்கு வந்து தங்குகின்றன.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், வருடந்தோறும் இங்கு வரும் பறவைகளில் 25க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இந்த பறவையை காக்க கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் பறவைகளின் இனிமையான குரல் அங்குள்ளவர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதை கேட்க கேட்க எங்கள் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த கிராமத்துக்குள் வந்து பறவைகளை எந்த தொந்தரவும் செய்ய முடியாது. யாராவது பறவைகளை வேட்டையாட நினைத்தால் கிராம மக்கள் கொதித்து எழுந்து விரட்டி அடிக்கின்றனர். ஒவ்வொரு தீபாவளி அன்றும் இந்த கிராமத்தில் பட்டாசு வெடிப்பது கிடையாது. காரணம் பட்டாசு வெடித்தால் பறவைகளுக்கு பயம் ஏற்பட்டு அவைகள் வெளியேறி சென்று விடும். எனவே அந்த பறவைகளை காப்பாற்றும் பொருட்டு இந்த கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறோம் என்றனர்….

The post மயிலாடுதுறை அருகே விநோதம் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் appeared first on Dinakaran.

Tags : Mayeladuthur ,Kodu ,Perampur ,Kodudam, Mayiladududwara district ,Mayiladudura ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு