×

தொடர் விடுமுறை எதிரொலி ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையான வார இறுதி நாட்கள் மற்றும் வரும் 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினம் என தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதனிடையே திங்கட்கிழமை மட்டும் வேலை நாளாக இருக்கும் நிலையில் பலர் விடுப்பு எடுத்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுவரை அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்க கூடிய 2100 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் இன்று 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதவிர 2 நாட்களுக்கு கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகரிக்கவும் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. வரும் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்னி பஸ்களில் தொடர் விடுமுறை வருவதை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை அதிக அளவில் உயர்த்தி உள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

சென்னை – குமரி குளிர்சாதன பேருந்துக்கு ரூ.2000, சாதாரண பேருந்து ரூ.1400, சென்னை – தேனி குளிர்சாதன பேருந்து ரூ.1650, சாதாரண பேருந்து ரூ.950, சென்னை – நெல்லை குளிர்சாதன பேருந்து ரூ.2450, சாதாரண பேருந்து ரூ.1400, சென்னை – மதுரை குளிர்சாதன பேருந்து ரூ.1,900, சாதாரண பேருந்துக்கு ரூ.900 வரை என டிக்கெட் கட்டணமாக உள்ளது. ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் வழக்கத்திற்கு மாறாக 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் புகார்கள் தொடர்பாக அதிரடி சோதனைகள் நடத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகளிடம் திருப்பி கொடுக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Omni ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து