×

தமிழக அமைச்சர் எ.வ.வேலு பற்றி பிரதமர், அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிய பேச்சை நீக்க வேண்டும்: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு டி.ஆர்.பாலு எம்பி கடிதம்

சென்னை: தமிழக அமைச்சர் எ.வ.வேலு பற்றி பிரதமர் மோடி, அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசிய பேச்சை நீக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, டி.ஆர்.பாலு எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களவையில் கடந்த 9ம் தேதி மற்றும் 10 ஆகிய தேதிகளில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி சுபின் இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் பதிலளித்துப் பேசுகையில், கடந்த 5ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட அரசு நூலகத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு அரசின் பொது பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆற்றிய உரையை, மக்களவையில் தவறாக மேற்கோள்காட்டி, கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

‘ஸ்மிருதி சுபின் இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மக்களவையில் ஆற்றிய உரைப் பகுதிகள், அவையை தவறாக வழிநடத்தும் வகையிலும், அவர்களது விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்துவது போன்று இருப்பதாலும், அவதூறு பரப்பக்கூடிய மற்றும் குற்றம் சாட்டக்கூடிய வகையில் இருப்பதாலும், அவை நடவடிக்கை குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், அமைச்சர் எ.வ.வேலு மக்களவையில் உறுப்பினராக இல்லை. அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் குறித்து, சபாநாயகருக்கு போதிய முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல், அவர்கள் இருவரும் எந்தக் குற்றச்சாட்டும் எ.வ.வேலு குறித்துக் கூற முடியாது. எனவே, ஸ்மிரிதி சுபின் இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மக்களவையில் ஆற்றிய உரையின் போது, அமைச்சர் எ.வ.வேலு பேசியதாக தெரிவித்த கருத்துக்கள், மக்களவையின் நடைமுறைகளுக்கு முரணானது. அவற்றை நீக்கவேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் விருது வழங்கும் விழாவில் கடந்த 5ம் தேதி அமைச்சர் எ.வ.வேலு ஆற்றிய உரையின் காணொலிக் காட்சியையும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, டி.ஆர்.பாலு அனுப்பியுள்ளார்.

The post தமிழக அமைச்சர் எ.வ.வேலு பற்றி பிரதமர், அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிய பேச்சை நீக்க வேண்டும்: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு டி.ஆர்.பாலு எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,A. Etb ,Smriti Irani ,PM ,R.R. ,Balu MB ,Chennai ,PM Modi ,Tamil ,Nadu ,Minister A. Etb. ,R.R. Balu ,MB ,Dinakaran ,
× RELATED வேலைவாய்ப்பு சிறப்புத்திறன் பயிற்சி...