×

பெரா வழக்கில் ரூ.31 கோடி அபராதம் வசூலிக்க கோரிய வழக்கு டிடிவி.தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு முடித்துவைப்பு

சென்னை: அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின்கீழ் (பெரா) டிடிவி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ.31 கோடியை வசூலித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக்கோரிய வழக்கில், அவரை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின்கீழ் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை கடந்த 1998 பிப்ரவரி 6ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, டிடிவி.தினகரன் வெளிநாட்டு பணப் மாற்ற ஒழுங்குமுறை மேல்முறையீடு வாரியத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த வாரியம் அமலாக்கத்துறையின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டிடிவி.தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2017 ஜனவரி 6ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இந்த அபராத பணத்தை டிடிவி.தினகரனிடம் இருந்து வசூலிக்க கோரி சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில், அமலாக்கத்துறை விதித்த அபராதத்தை எதிர்த்து டிடிவி.தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அபராத தொகையை அமலாக்கத்துறை வசூலித்துவிட்டதா என்று கேட்டு அமலாக்கத் துறையிடம் கேட்டு மனு அனுப்பியதற்கு உரிய பதில் தரப்படவில்லை.

எனவே உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாகியும் அமலாக்கத்துறை விதித்த அபராத தொகையான ரூ.31 கோடி இன்னும் டிடிவி.தினகரனிடம் இருந்து வசூலிக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கையையும் அமலாக்கத்துறை இதுவரை எடுக்கவில்லை. அதன் மீது அமலாக்கத்துறை ஆர்வமும் காட்டவில்லை. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டிடிவி.தினகரனுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலங்களில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

அபராத தொகையை வசூலிப்பதற்காக டிடிவி.தினகரனுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய முடியும். ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2019 டிசம்பர் 9ம் தேதி அமலாக்கத்துறைக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் டிடிவி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதை எதிர்த்து சிவில் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் டிடிவி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post பெரா வழக்கில் ரூ.31 கோடி அபராதம் வசூலிக்க கோரிய வழக்கு டிடிவி.தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : Bera ,Dinakaran ,Chennai ,TTV.Thinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…