×

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக 100 மஞ்சள் நிற பேருந்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் ரூ.15 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகளை ரூ.152.50 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 16 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 15 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 37 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்திற்கு 32 பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகள் ரூ.14 கோடியே 90 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு தயாராக இருந்தது.

இந்த பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தீவுத்திடலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு, போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக 100 மஞ்சள் நிற பேருந்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : State Transport Corporation ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu State Transport Corporations ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...