×

சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மது பரிமாற விதிகளில் திருத்தம் பேரவை கூட்டத்தொடரில் தாக்கல்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா என்று தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த திருத்த விதிகள் கடந்த கூட்டத்தொடரின் போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எதிர்வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். அதுவரை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். திருத்த விதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மது பரிமாற விதிகளில் திருத்தம் பேரவை கூட்டத்தொடரில் தாக்கல்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : International ,of ,Government of Tamil Nadu ,iCordt ,Chennai ,Tamil Nadu ,International Seminar ,ICORT Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து...