×

மகளிர் உலக கோப்பை கால்பந்து அரையிறுதியில் ஸ்பெயின்: ஸ்வீடனும் முன்னேற்றம்

வெலிங்டன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட ஸ்பெயின், ஸ்வீடன் அணிகள் தகுதி பெற்றன. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நேற்று நடந்த முதல் காலிறுதியில் ஸ்பெயின் – நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால், முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. 2வது பாதி ஆட்டத்தில், 81வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் மரியோனா கால்டென்டே கோலடிக்க அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடியும் தருவாயில் காயம் உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்ட நேரத்தை ஈடு செய்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில், நெதர்லாந்து வீராங்கனை ஸ்டீஃபனி கிராக்ட் கோல் போட்டு அசத்தினார். ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததை அடுத்து, கூடுதலாக 30 நிமிட ஆட்டம் நடைபெற்றது. 111வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

அடுத்து நடந்த மற்றொரு காலிறுதியில் ஸ்வீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்வீடன் சார்பில் அமண்டா (32வது நிமிடம்), பிலிப்பா (51’) கோல் போட்டனர். ஜப்பான் வீராங்கனை ஹயாஷி 87வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார். ஆக. 15ல் நடக்கும் அரையிறுதியில் ஸ்பெயின் – ஸ்வீடன் அணிகள் மோத உள்ளன. இன்று நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா – பிரான்ஸ், இங்கிலாந்து – கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து அரையிறுதியில் ஸ்பெயின்: ஸ்வீடனும் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Spain ,Sweden ,Women's World Cup ,WELLINGTON ,New Zealand's… ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...