×

இந்திய குற்றச்சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் அறிமுகம்: தேசதுரோக சட்டத்துக்கு பதில் மாற்றுச் சட்டம்; நாடாளுமன்றத்தில் அமித்ஷா தாக்கல்

புதுடெல்லி: குற்றச்சட்டங்களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக 3 புதிய மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மக்களவையில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சட்டங்களை மாற்றி அமைக்க புதிதாக 3 மசோதாக்களை தாக்கல் செய்தார். 1860ல் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்துக்கு(ஐபிசி) பதில் பாரதிய நியாய சன்ஹிதா (பாரதிய நீதிச்சட்ட மசோதா) 1898ல் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா), 1872ம் ஆண்டின் இந்திய
சாட்சியச் சட்டத்திற்கு பதில் பாரதிய சாக்ஷ்யா (பாரதிய சாட்சி சட்ட மசோதா) ஆகிய மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்த புதிய மசோதாக்கள் மூலம் நமது நாட்டில் தேங்கியுள்ள வழக்குகளில் விரைவான நீதியை வழங்குவதற்கும், புதிய சட்ட அமைப்பை உருவாக்குவதற்கும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய காலத்திற்கு ஏற்பட மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரதிய நாகரிக் மசோதாவில் தேச துரோகத்தை ரத்து செய்வதற்கும், கும்பல் கொலை மற்றும் சிறார்களை பலாத்காரம் செய்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச மரணதண்டனை வழங்குவதற்கான விதிகள் உள்ளன. சிறிய குற்றங்களுக்கான தண்டனைகளில் ஒன்றாக முதல் முறையாக குற்றம் செய்தால் சமூக சேவையை தண்டனையாக வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மசோதாவில் உள்ளது.

நாட்டில் பிரிவினைச் செயல்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற புதிய குற்றங்களும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இந்த மசோதாக்கள் நமது குற்றவியல் நீதி அமைப்பை மாற்றும் என்று நான் சபையில் உறுதியளிக்கிறேன். இதன் நோக்கம் தண்டனையாக இருக்காது, நீதியை வழங்குவதாக இருக்கும். குற்றத்தை நிறுத்துவதற்கான உணர்வை உருவாக்க தண்டனை வழங்கப்படும். ஏனெனில் ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்கள், தங்கள் ஆட்சிக்கு எதிரானவர்களைத் தண்டிக்கும் நோக்கில் அடிமைத்தனத்தின் அடையாளங்களால் நிறைந்திருந்தன.

பிரிட்டன் ஆட்சி நிர்வாகத்தைப் பாதுகாப்பதும், பலப்படுத்துவதுமே அந்த சட்டங்களின் நோக்கமாக இருந்தன. மேலும் அவர்களது சட்டங்களில் தண்டனை வழங்குவதில் தான் அதிக கவனம் இருந்தது. நீதி வழங்குவதில் இல்லை. அந்த சட்டங்களை மாற்றுவதன் மூலம், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 3 சட்டங்கள் இந்திய குடிமகன்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் உணர்வைக் கொண்டுவரும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றங்கள் பாலின வகை அடிப்படையில் நடுநிலைப்படுத்தப்பட்டுள்ளன.

70 ஆண்டுக்கும் மேலான இந்திய ஜனநாயகத்தின் அனுபவம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட நமது குற்றவியல் சட்டங்களை விரிவாக மறுஆய்வு செய்து, மக்களின் சமகாலத் தேவைகள், இப்போது நடக்கும் குற்றங்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைக்க வசதியாக இந்த 3 புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து குடிமக்களும் அணுகக்கூடிய மற்றும் விரைவான நீதியை வழங்குவதற்காக குற்றவியல் சட்டங்களின் கட்டமைப்பை ஒரு விரிவான மறுபரிசீலனை செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த 3 மசோதாக்களையும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்படி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

* தேசதுரோகத்திற்கு பதில் மாற்று சட்டம்
தேசத்துரோகத்திற்கான சட்டப்பிரிவை ரத்து செய்ய அரசு முன்மொழிந்துள்ளது. ஆனால் அதை வேறு சட்டவடிவில் கொண்டு வந்தது. அதன்படி யாரேனும் வேண்டுமென்றே அல்லது தெரிந்தே, வார்த்தைகளால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது அடையாளங்கள், அல்லது காணக்கூடிய பிரதிநிதித்துவம், அல்லது மின்னணு தொடர்பு அல்லது நிதி வழிகளைப் பயன்படுத்துதல், அல்லது வேறுவிதமாக, தூண்டுதல் அல்லது பிரிவினையை தூண்டுவதற்கு அல்லது ஆயுதம் ஏந்திய முயற்சிகள் கிளர்ச்சி அல்லது நாசகார நடவடிக்கைகள், அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகளின் உணர்வுகளை ஊக்குவித்தல் அல்லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து அல்லது அத்தகைய செயலில் ஈடுபட்டாலோ அல்லது செய்தாலோ ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தேசத் துரோகச் சட்ட பிரிவின்படி, குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அத்தகைய குற்றம் யாரேனும் ஒருவரின் மரணத்திற்கு வழி வகுக்கும் பட்சத்தில் மரண தண்டனை அல்லது பரோலின் பலன் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

* ‘இந்தியா’ நீக்கம் ‘பாரதிய’ஆக மாற்றம்
இதுவரை இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சி சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், என்றுதான் குற்றவியல் சட்டங்கள் அழைக்கப்பட்டு வந்தன. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டி உள்ளன. தற்போது காலனி ஆதிக்க சட்டங்கள் என்று கூறி குற்றச்சட்டங்கள் மாற்றிய போது, அதில் உள்ள இந்தியா நீக்கப்பட்டு அதற்கு பதில் பாரதிய நீதிசட்ட மசோதா, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதிய சாட்சி சட்ட மசோதாவாக மாற்றப்பட்டுள்ளது.

* 5 பேருக்கு மேல் கூடி வன்முறை செய்தால் ஆயுள்
இனம், சாதி அல்லது சமூகம், பாலினம், பிறந்த இடம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வன்முறையில் ஈடுபடும் போது, ​​அத்தகைய குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆயுள் அல்லது 7 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

3 புதிய மசோதாக்களில் உள்ள முக்கிய அம்சங்கள்
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* சட்டங்களின் நோக்கம் தண்டிப்பது அல்ல, நீதி வழங்குவது. குற்றத்தை நிறுத்த வேண்டும் என்ற உணர்வை உருவாக்க தண்டனை வழங்கப்படும்.
* எப்.ஐ.ஆர் பதிவு செய்வது முதல் வழக்கு டைரி, குற்றப்பத்திரிகை மற்றும் தீர்ப்பு பெறுவது வரை முழு நடைமுறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் இருக்கும்.
* நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் 2027க்குள் கணினிமயமாக்கப்படும்.
* முதல் முறையாக, இ-எப்ஐஆர்களை தாக்கல் செய்வது சாத்தியமாகும்.
* ஒரு சம்பவத்தின் பூஜ்ஜிய எப்ஐஆர் எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படலாம். 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பப்படும்.
* பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்தால், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம்.
* ஒரு வழக்கின் நிலையை 90 நாட்களுக்குள் போலீசார் வழங்க வேண்டும்.
* ஏழாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படும் வழக்கை பாதிக்கப்பட்டவரின் விசாரணையின்றி எந்த அரசாங்கமும் திரும்பப் பெற முடியாது. இதன் மூலம் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
* முதல் முறையாக தண்டனையாக சமூக சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
* வழக்குகளில் தாமதம் ஏற்படுவதை தடுக்க, மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் வழக்குகளுக்கு, சுருக்க விசாரணை போதுமானதாக இருக்கும். இதன் மூலம் செஷன்ஸ் நீதிமன்றங்களில் வழக்குகள் 40 சதவீதம் குறையும்.
* 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க முடியும். 180 நாட்களில் விசாரணையை முடித்து விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.
* விசாரணைக்கு பின், 30 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* அரசு ஊழியர்களுக்கு எதிரான புகார்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 120 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். பதில் வரவில்லை என்றால், அது ஆம் என்று கருதப்படும்.
* அறிவிக்கப்பட்ட குற்றவாளியின் சொத்துகள் மூலம் இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.
* ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் சர்வதேச கும்பல்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
* சிறார்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு.
* கும்பல் கொலைக்கு, ஏழு ஆண்டுகள் சிறை, ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்படும்.
* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
* மாநில அரசுகள் தண்டனை தள்ளுபடியை அரசியல் ரீதியாக பயன்படுத்துவதை நிறுத்த, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மட்டுமே மாற்ற முடியும் என்றும், ஆயுள் தண்டனையை ஏழாண்டுகளுக்குள் மட்டுமே மன்னிக்க முடியும் என்றும் புதிய விதி வகுக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சட்டத்திலிருந்து தப்பக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
* தேசத்துரோக சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
* இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்
* முன்பு, பயங்கரவாதம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. முதன்முறையாக பயங்கரவாதம் வரையறுக்கப்படுகிறது.
* அவர் அல்லது அவள் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டால் குற்றவாளிகள் இல்லாமல் விசாரணை நடத்த அனுமதிக்கப்படும். இது தாவூத் இப்ராகிம் போன்ற குற்றவாளிகளின் விசாரணையை சாத்தியமாக்கும்.
* வீடியோ படம் எடுத்தவுடன் வழக்கு முடியும் வரை வாகனங்களை வைத்திருக்க வேண்டியதில்லை.
* குற்றவியல் நீதி அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, அதிகபட்சம் மூன்றாண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும்.
* திருட்டுச் சொத்தின் மதிப்பு 5,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், முதல்முறையாக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் சொத்தின் மதிப்பை அல்லது திருடப்பட்ட சொத்தை மீட்டெடுத்தவுடன், திருட்டு வழக்குகளில், சமூக சேவையுடன் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

* வாக்காளருக்கு பணம், பரிசு கொடுத்தால் ஓராண்டு சிறை
பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி தேர்தலின்போது வாக்காளருக்கு பணம், பரிசு கொடுத்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து குற்றங்களும் 167 முதல் 175 வரையிலான சட்டங்களில் இடம் பெற்று உள்ளது. தேர்தல் செலவு கணக்கை முறையாக காண்பிக்காவிட்டால் முன்பு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது ரூ.5 ஆயிரமாக மாற்றப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள்
* பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
* கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 20 ஆண்டு சிறை அல்லது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படும்.
* பலாத்காரத்திற்குப் பிறகு ஒரு பெண் இறந்தாலோ அல்லது அந்த பெண் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத தண்டனை வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை, இறக்கும் வரை அல்லது மரணத்துடன் கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும்
* 12 வயதுக்குட்பட்ட சிறுமியை கும்பலாக பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். தனிநபர் சிறுமியை பலாத்காரம் செய்தால் 20 ஆண்டுகளுக்கும் குறையாத அளவு சிறை தண்டனை, அதாவது இறக்கும் வரை சிறையில் இருக்க வேண்டும்.
* வஞ்சகமாக, திருமண ஆசை காட்டி ஒரு பெண்ணை உடலுறவு கொண்டாலோ, பாலியல் பலாத்காரக் குற்றத்திற்கு ஒப்பாத உடலுறவு கொண்டாலோ, அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும்.

* அரசு ஊழியர், ஆசிரியர் பலாத்காரம் செய்தால் ஆயுள் சிறை
ஒரு போலீஸ் அதிகாரி அல்லது பொது ஊழியர் அல்லது ஆயுதப் படையைச் சேர்ந்தவர் பலாத்காரம் செய்தால், அவர் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுமையான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார். மேலும் ஆயுள் தண்டனை அல்லது மரணம் வரை சிறைதண்டனை வழங்கலாம். பயங்கரவாதச் செயலைச் செய்ய முயற்சிப்பவர் அல்லது செய்ய முற்பட்டால், அத்தகைய குற்றம் யாரேனும் ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்தால், பரோலின் பயனில்லாமல் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

* தற்கொலைக்கு தூண்டினால் 10 ஆண்டு சிறை
எவரேனும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலைக்கு உறுதுணையாக இருப்பவர், பத்தாண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்.

* கூட்டு சேர்ந்து குற்றம் செய்தால் மரண தண்டனை
கடத்தல், கொள்ளை, வாகன திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு, ஒப்பந்த கொலை, பொருளாதார குற்றங்கள், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இணைய குற்றங்கள், மக்கள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், விபச்சாரத்திற்காக ஆள் கடத்தல் அல்லது கப்பம் கட்டுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எவரும் வன்முறை, வன்முறை அச்சுறுத்தல், மிரட்டல், வற்புறுத்தல், ஊழல் அல்லது அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை உருவாக்கும். யாரேனும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை செய்தாலும், அல்லது செய்ய முயற்சித்தாலும், அத்தகைய குற்றம் யாரேனும் ஒரு நபரின் மரணத்திற்கு வழிவகுத்தால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

* குடிபோதையில் தவறு செய்தால் சமூக சேவை தான் தண்டனை
சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்களை மரங்களை நடவும், வழிபாட்டுத் தலங்களில் சேவை செய்யவும், தங்குமிடங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் சேவை செய்யவும், போக்குவரத்து சிக்னல்களை நிர்வகிக்கவும் புதிய மசோதா வழி செய்கிறது. மேலும் அரசு ஊழியர் சட்டத்திற்குப் புறம்பாக வர்த்தகத்தில் ஈடுபடுதல், நோட்டீசுக்கு பதிலளிக்காமல் இருப்பது, சட்டப்பூர்வ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற சிறிய குற்றங்களுக்கான தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையை மசோதா முன்மொழிந்துள்ளது. பாரதிய நீதிச்சட்ட மசோதாவின்படி, அவதூறு குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சாதாரண சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் அல்லது சமூக சேவையுடன் தண்டனை விதிக்கப்படும்.

* இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், குடிபோதையில் ஒரு நபர் பொது இடத்தில் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்கு 24 மணிநேரம் வரை நீட்டிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சம் ரூ 10 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆனால் பாரதிய நீதிச்சட்ட மசோதாவில், அபராதத்தின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 1,000 மற்றும் சமூக சேவை வழங்குதல் சேர்க்கப்பட்டுள்ளது.
* இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தற்கொலை முயற்சி ஒரு குற்றம். இதற்கு அதிகபட்சம் ஒரு வருடம் தண்டனை வழங்கப்படும். ஆனால் பாரதிய நீதிசட்டத்தில், ‘தற்கொலை செய்ய முயற்சிப்பவருக்கு ஒரு வருடம் வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் அல்லது சமூக சேவையுடன் தண்டிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post இந்திய குற்றச்சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் அறிமுகம்: தேசதுரோக சட்டத்துக்கு பதில் மாற்றுச் சட்டம்; நாடாளுமன்றத்தில் அமித்ஷா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Amitsha ,New Delhi ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...