×

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்க தயாராகும் மாஜி அமைச்சரின் தந்தை

திருச்சி: கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி தயாராகி வருகிறார். அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருந்தாலும், தேர்தல் பணிகளை கட்சிகள் இப்போதே துவக்கி விட்டன. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. கரூர் மக்களவை தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் தம்பித்துரை போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அப்போதே புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி(70) கரூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு, கட்சியில் விருப்ப மனு அளித்தார். ஆனால் சீனியரான தம்பிதுரைக்கு சீட் வழங்கப்பட்டது.இப்போது தம்பித்துரை மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். எனவே அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என்று விஜயபாஸ்கரின் தந்தை, சின்னதம்பி தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார்.சின்னதம்பி ஏற்கனவே அன்னவாசல் ஒன்றிய குழு தலைவராக இருந்துள்ளார். இப்போது மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார்.

கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் இப்போது சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏவாக உள்ளார். இதுபற்றி சின்னதம்பியிடம் கேட்ட போது, கரூர் எம்பி தொகுதியில் போட்டியிட கடந்த முறையும் அதிமுகவில் சீட் கேட்டேன். அதற்கு முன்பாக 2014லிலும் சீட் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. இந்த முறையும் மகனிடம்(விஜயபாஸ்கர்) கலந்து பேசி விட்டு சீட் கேட்பேன். கட்சி அனுமதி வழங்கினால் போட்டியிடுவேன் என்றார்.

The post கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்க தயாராகும் மாஜி அமைச்சரின் தந்தை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Karur ,Trichy ,Chinnathambi ,C.Vijayabaskar ,Karur Lok Sabha ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது