×

குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் அருகில் அணு தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: மாசுகட்டுப் பாட்டு வாரியம் பதில்தர மேல் முறையீடு வாரியம் உத்தரவு

சென்னை: குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் அணு தொழிற்சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், கோவை கலெக்டர் உள்ளிட்டோர் பதில் தருமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு மேல் முறையீடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு மேல் முறையீடு வாரியத்தில் கோவை வெள்ளானைப்பட்டியை சேர்ந்த ஆர்.மோகன்குமார் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே அட்டாமிக் என்டிடி சர்வீஸ் நிறுவனம் கடந்த 2021ல் கட்டுமான பணிகளை தொடங்கியது. ஏதோ தொழிற்சாலை வருவதாக நினைத்த நான் அது குறித்து விசாரித்தபோது அணு உலை தொடர்பான தொழிற்சாலை என்றும் இருடியம்-192 உள்ளிட்ட மனித வாழ்வை பாதிக்கக் கூடிய வேதிப்பொருள்கள் மூலம் அணு உற்பத்தி தொழிற்சாலை என்றும் தெரிய வந்தது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அட்டாமிக் என்டிடி நிறுவனம் சார்பில் மணிகண்டன் என்பவர் அணு உற்பத்தி தொழிற்சாலை எந்த தொந்தரவும் இல்லாமல் செயல்படுவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவில், இந்த அணு தொழிற்சாலை அமைப்பதற்காக எந்த அனுமதியும் பெறப்படவில்லை. உரிய உத்தரவை சம்மந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்ற பிறகே தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எனது விவசாய நிலத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த தொழிற்சாலை அமைய திட்டமிடப்பட்டுள்ளது. நியூக்கிளியர் கதிர்வீச்சு வகையான தொழிற்சாலையான இந்த தொழிற்சாலையை சட்ட விரோதமாக அமைத்து வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலையால் எங்கள் கிராமத்தில் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும். பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் கதிர் வீச்சால் கடுமையான பாதிப்பு ஏற்படும். இந்த நிலையில், இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கு அனுமதி அளித்து கடந்த ஜனவரி 19ம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, உரிய அனுமதி எதுவும் பெறாமல் அமைக்கப்பட்டு வரும் இந்த அணு தொழிற்சாலையை கட்டுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாரியம் அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அணு தொழிற்சாலை இயங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய மேல் முறையீடு தீர்ப்பாயத்தில் நீதிபதி கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர்.பாலரமேஷ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, சம்மந்தப்பட்ட அணு தொழிற்சாலைக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று உத்தரவிட்டு, இந்த மனுவுக்கு வரும் 30ம் ேததிக்குள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், அட்டாமிக் என்டிடி சர்வீசஸ் நிறுவனம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், கோவை கலெக்டர் ஆகியோர் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் அருகில் அணு தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: மாசுகட்டுப் பாட்டு வாரியம் பதில்தர மேல் முறையீடு வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Song Board ,Upper Appeal Board ,Chennai ,Tamil Nadu ,Pollution Song Board ,Appeal Board ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...