×

தேசியக் கொடியின் வரலாறு அறியாத ஒருவரை பிரதமராக பெற்றுள்ளோம்; ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் பேசியுள்ளார்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் வரலாறு காணாத வன்முறையை எதிர்கொண்டு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேச தயாராக இல்லை. 3 பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று வன்முறையாளர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது சமூக ஊடகங்களில் வெளிவந்த போது தான் ஜூலை 20ம்தேதி நாடாளுமன்றம் கூடியது. அன்று காலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகத்தினருக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், 36 நொடிகள் மணிப்பூரைப் பற்றி பரிவு காட்டி பேசியிருக்கிறார்.

அத்தகைய பேச்சை நாடாளுமன்றத்துக்கு உள்ளே வந்து பேச அவர் தயாராக இல்லை. இதுகுறித்து விவாதிக்க முயற்சி செய்து வாய்ப்பு இல்லாத நிலையில் தான் பிரதமர் பேச வலியுறுத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது ராகுல்காந்தி 37 நிமிடங்கள் பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 மணி நேரம், பிரதமர் மோடி 2 மணி 10 நிமிடங்கள் பேசினார்கள். அதில், பிரதமர் பேச்சில் முதல் 90 நிமிடம் வரை மணிப்பூரைப் பற்றி பேச முன்வரவில்லை. எதிர்கட்சிகள் மீது, குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது ஆதாரமற்ற அவதூறுகளை பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல பிரதமர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் மக்களவையில் பேசுவதை சகித்துக் கொள்ளாத எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதோ அதுகுறித்து பேசாமல் புறக்கணித்ததனால் தான் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது. பிரதமர் உரையில் அடிப்படை ஆதாரமில்லாமல் அவதூறான கருத்துகளை தொடர்ந்து பேசியிருக்கிறார். தேசியக் கொடியில் இருந்து மூவர்ணத்தை காங்கிரஸ் எடுத்துக் கொண்டதாக கூறுகிறார். விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சியின் ராட்டை பொறித்த மூவர்ண கொடியை அடிப்படையாக வைத்து, அதில் அசோக சக்கரத்தை இடம் பெறச் செய்து அரசியல் நிர்ணய சபையால் பிரதமர் நேரு அறிமுகம் செய்து உருவானது தான் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிற தேசியக் கொடி. தேசியக் கொடியின் வரலாறு அறியாத ஒருவரை பிரதமராக நாம் பெற்றிருக்கிறோம்.

இந்தியா என்பது வடஇந்தியா மட்டுமல்ல என்று தமிழ்நாட்டு அமைச்சர் பேசியதாக குற்றச்சாட்டை பிரதமர் மோடி கூறியருக்கிறார். ஒன்றிய பாஜ அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதவில்லை. திட்டங்களை தீட்டுவதிலும், நிதிகளை ஒதுக்குவதிலும் பாஜ ஆளும் மாநிலங்களுக்கிடையே அப்பட்டமான பாரபட்சத்தை கடைப்பிடிக்கிறது. இதை கண்டிக்கும் விதத்தில் தான் திமுக அமைச்சர் அப்படி கருத்து கூறியிருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலின் தொடர்ச்சியாகத் தான் மணிப்பூர் மாநிலம் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. குக்கி பழங்குடி மக்களும், சமவெளியில் வாழ்கிற மைத்தி மக்களும் எந்த காலத்திலும் இணைந்து வாழ முடியாத நிலையை பாஜ உருவாக்கியிருக்கிறது.

ஒன்றிய மோடி அரசால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்காது என்ற காரணத்தினால் தான் உச்சநீதிமன்றம் நேரடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதைவிட பிரதமர் மோடிக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. நாடாளுமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டதாகும். அந்த அவைக்கு வர விரும்பாதது பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத உணர்வும், பாசிச, சர்வாதிகார போக்கும் தான் வெளிப்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடாக அமையும்.

The post தேசியக் கொடியின் வரலாறு அறியாத ஒருவரை பிரதமராக பெற்றுள்ளோம்; ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் பேசியுள்ளார்: கே.எஸ்.அழகிரி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Congress ,K.K. S.S. ,Manipur ,K. ,
× RELATED மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய...