×

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரும், அமித்ஷாவும் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள்: ராகுல் காந்தி காட்டம்..!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுடன் பரபரப்பாக நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி; மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நேற்று 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்திய தாயை கொன்றதற்கு சமம். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் நாங்கள் மணிப்பூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினோம். பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும். மணிப்பூர் தொடர்பான எங்களது நிலைப்பாட்டில் உறுதியோடு உள்ளோம். மாதக் கணக்கில் மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது; மக்கள் கொல்லப்படுகிறார்கள். மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் சிரிப்பது வெட்கக்கேடானது. மணிப்பூருக்கு செல்லாமலேயே அதைப்பற்றி பேசுவது எப்படி?. மணிப்பூர் நிலவரம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதுதான் தற்போதைய சூழல்.

ஒன்றிய அரசு நினைத்திருந்தால் மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய ராணுவம் 2 நாட்களில் மணிப்பூர் கலவரத்தை தடுத்திருக்கும், ஆனால் மணிப்பூர் கலவரத்தை தடுக்க பிரதமர் விரும்பவில்லை. பிரதமர் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூற வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல வாய்ப்புகள் இருந்தும் பிரதமர் அதை பயன்படுத்தவில்லை. பிரதமர் மணிப்பூருக்கு செல்வதற்கான அறிகுறிகள்கூட தெரியவில்லை. என் அரசியல் அனுபவத்தில் நான் எங்கும் கண்டிராத துயரங்களை மணிப்பூரில் கண்டேன்.

பிரதமருக்கான கடமை என்ன என்பதே நரேந்திர மோடிக்கு தெரியவில்லை. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனைதான் கூறமுடியும்; பிரதமர்தான் தீர்வு காண முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கால பிரதமர்கள், பாஜகவின் வாஜ்பாய், தேவகவுடா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளதை பார்த்திருக்கேன். ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. பாரத மாதா என பேசியதை முதல்முறையாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர். வரலாற்றில் முதல்முறையாக பாரத மாதா என்ற சொல் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பிரதமர் என்பவர் நாட்டின் பிரதிநிதி; அவருடைய பேச்சில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். 2024-ல் மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்பது எங்கள் கேள்வியல்ல; மணிப்பூர் மக்களின் நிலை என்ன என்பதே எங்கள் கேள்வி. மணிப்பூர் பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகள் பற்றி மட்டுமே பேசினார் பிரதமர் மோடி. நான் மீண்டும் சொல்கிறேன்; இந்தியா என்ற கருத்தியலை பாஜக கொலை செய்துவிட்டது இவ்வாறு கூறினார்.

The post மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரும், அமித்ஷாவும் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள்: ராகுல் காந்தி காட்டம்..! appeared first on Dinakaran.

Tags : PM ,Amitsha ,Bharatha Matha ,Manipur ,Rahul Gandhi ,Gandhi ,Delhi ,Union Minister ,Amitshah ,Bharatha Math ,
× RELATED ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம்...