×

இந்தியா முதல் இந்தோனேசியா வரை 49 ரக வாழைகளைப் பயிரிடும் குமரி விவசாயி

வாழைக்கென்று பெயர் பெற்ற கன்னியாகுமரியில் 49 விதமான வாழை ரகங்களை ஒரே இடத்தில் பயிரிட்டு அதில் விளைச்சலும் எடுத்து வருகிறார் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜே.ஜோ.பிரகாஷ். குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்த ஜே.ஜோ.பிரகாஷை ஒரு காலைப்பொழுதில் சந்திக்கச் சென்றிருந்தோம். வரவேற்று வாழை ரகங்களைக் காண்பித்தவாறே பேசத்தொடங்கினார். ‘‘அரசுப்பணியில் இருக்கும் வரை விவசாயம் என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. எங்கள் நிலங்கள் கூட குத்தகைக்குத்தான் விடப்பட்டிருந்தன. பணியில் இருந்து நான் ஓய்வுபெற்ற பிறகுதான் விவசாயம் பக்கம் திரும்பினேன். அதற்குக் காரணம் எனது பேத்திதான். 2016ம் ஆண்டு எனக்கு ஒரு பேத்தி பிறந்தாள். அவளுக்கு ரசாயன கலப்பில்லாத பழங்களை சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வாழைக்கன்றுகளை சேகரிக்க ஆரம்பித்தேன். புதிய ரகங்கள் சேரச்சேர அதன் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. அப்படித்தான் இந்த பலரக வாழை பயிரிடுவதை தொடர்ந்தேன்.

முதலில் முள்ளங்கினாவிளையில் எனக்கு சொந்தமான 45 சென்டிலும், சேனம்விளையில் 40 சென்ட் நிலத்திலும், தொலையாவட்டம் பகுதியில் 65 சென்ட் தென்னந்தோப்பிற்கு இடையே ஊடுபயிராகவும் வாழைகளை நடவு செய்தேன். மொத்தம் என்னிடம் 49 வாழை ரகங்கள் உள்ளன. இதில் வெளிநாட்டு ரகங்கள் 5 உள்ளன. வாழை ரகங்கள் அனைத்தும் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. நான் காங்ரெஜ், காங்கேயம் போன்ற நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறேன். அவைகளிடமிருந்து கிடைக்கும் கோமியம், சாணம் கொண்டும் குப்பைமண், வேப்பம்புண்ணாக்கு, புன்ணக்காய் புண்னாக்கு, மண்புழு உரம் ஆகியவைகளை மட்டுமே உரமாக பயன்படுத்தி வருகிறேன். ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் எனது தோட்டத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை.

பலதரப்பட்ட வாழை ரகங்களை பயிரிட நினைத்தவுடன் எங்கள் மாவட்டத்தில் இருந்தும், பிற மாநிலத்தில் இருந்தும் வெளி நாடுகளில் கிடைக்கிற பலவகையான வாழை ரகங்களை பயிரிடலாம் என யோசனை வந்தது. அதை தொடர்ந்து நண்பர்களின் உதவியோடு எல்லா ரக வாழையையும் பயிரிட்டு இருக்கிறேன். அந்த வகையில் இப்போது 49 வாழை ரகங்களை சேகரித்துள்ளேன். ஏத்தன் அதாவது நேந்திரன் வாழையை பொறுத்தவரையில் நான்கைந்து ரகங்கள் இருக்கின்றன. யாழி ஏத்தன், அடுக்கு ஏத்தன், மைசூர் ஏத்தன், ஒற்றைக்கொம்பன், யானைக்கொம்பன் என பல ரகங்கள் உள்ளன. மைசூர் ஏத்தன் ஒரு தாரில் 50 முதல் 65 கிலோ வரை இருக்கும். ஒற்றைக்கொம்பன் என்பது ஒரு சீப்பு மட்டுமே இருக்கும். ஆனால் காய் பெரிதாக இருக்கும். கடந்த முறை வெட்டின குலையில் 10 காய்கள் 13 கிலோவுக்கு இருந்தது. அதாவது ஒரு பழம் 1300 கிராம் எடை இருந்தது. ஒரு பழத்தை ஒருவரால் சாப்பிட முடியாது. அதுபோல் ஒரே ஒரு காய் காய்க்கக்கூடிய யானைக்கொம்பன் என்று ஒரு ரகமும் இருக்கிறது. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் இதுவரை அது எனக்கு கிடைக்கவில்லை.

செவ்வாழை (செந்துழுவன்) என்று நாம் அழைக்கும் பழம் துழுவன் வகையைச் சார்ந்தது. துழுவனில் வெள்ளைத்துழுவன், அரித்துழுவன், அணில் துழுவன், கருந்துழுவன் என பல ரகங்கள் இருக்கின்றன. கருந்துழுவன் குலை வெட்டுவதற்கு ஒன்றரை வருடங்கள் வரை ஆகும்.கதலி வகைகளை பொறுத்தவரையில் பூங்கதலி, ரசகதலி, பூஜாகதலி, தேவன்கதலி, நெய் கதலி, ஆற்றுக்கதலி என பல வகைகள் உண்டு. இதில் பூஜாகதலி மற்றும் தேவன் கதலி பூஜைக்காக படைக்கப்படும். சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த பழங்களை எடுத்து செல்வர். கதலி ரகத்தை படத்தி வாழை பட்டியலில் சேர்ப்பார்கள்.

மட்டியைப் பொறுத்தவரையில் தேன்மட்டி, மலைமட்டி, செம்மட்டி, பிச்சிப்பூ மட்டி என பல ரகங்கள் உள்ளன. மலை மட்டியை சுந்தரி மட்டி என்றும் அழைப்பதுண்டு. பென்சில் போல நீளமாக இருக்கும். கேரளத்தில் வேலிகளில் கூட அதை நட்டுவைப்பது உண்டு. செம்மட்டி மருத்துவக் குணம் வாய்ந்தது. பிச்சிப்பூ மட்டி மணம் கமகம என்று இருக்கும். செம்பட்டியை நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். கொய்யா போல சற்று துவர்ப்பாக இருக்கும்.
பேயன் வாழையிலும் நான்கு ரகங்கள் உண்டு. சக்கை பேயன், வரிப்பேயன், புள்ளிப் பேயன், சாம்பல் பேயன் ஆகும். இதில் வித்தியாசம் உண்டு. திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட பப்லு என்ற ரகம் பஜ்ஜி போடுவதற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.

பாளையங்கோட்டான் என்று நாம் சொல்லும் வாழையிலும் இரண்டு, மூன்று ரகங்கள் இருக்கின்றன. இது சென்னையில் மஞ்சள் வாழை என்று அழைப்பதுண்டு. பூவாழை என்றும் சொல்வதுண்டு. இதன் சுவை சற்று புளிப்பாக இருக்கும். மலச்சிக்கலுக்கு சிறந்தது என்பார்கள். பிற மாவட்டங்களை பொருத்தவரை ஏலக்கி, விருப்பாச்சி, திண்டுக்கல் சிறுமலை, சேலம் கற்பூரவள்ளி, கொல்லிமலை தெமரை என பல்வேறு ரகங்கள் என்னிடம் இருக்கின்றன. பிற மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகாவில், மைசூரில் மிகவும் பிரசித்தி பெற்ற நஞ்சன்கோடு ரசபெல்லா, கேரளத்தில் வயநாடு பகுதியில் உள்ள அமிர்தபானி, குட்டை நேந்திரன் என்ற வகைகளும் என்னிடம் உள்ளன. பிறநாடு
களைப் பொறுத்தவரை ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த வாழைகளும் என்னிடம் இருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து நான் எடுத்து வந்த ஒரு சிறு கன்று இரண்டு அடி மட்டுமே வளரும். அது ஒரு குட்டை ரகத்தை சார்ந்தது. இதுவும், பிலிப்பைன்ஸ் பிளன்டைன் ரகமும் நம்மூர் ரோபஸ்டா சுவையில்தான் இருக்கிறது. தாய்லாந்து

வாழையும், ஆப்பிரிக்கா வாழையும் எனது நண்பர் ஒருவர் கொடுத்தது. அவருக்கும் பல்வேறு வாழை ரகங்கள் சேகரிப்பதில் ஆர்வம் உண்டு. இந்தோனேசியா ரகம், வாழை மரம் உயரத்துக்கு குலை நீளமாக இருக்கும். ஆனால் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது. அது ஒரு அலங்கார வாழை இனத்தை சார்ந்தது. கூம்பு மேல் நோக்கியே இருக்கும் மூங்கில் வாழையும் என்னிடம் உள்ளது. அதுவும் அலங்கார வாழை இனத்தை சார்ந்ததுதான். அது போல கூம்பு முழுவதுமே காய் வருகின்ற கூம்பில்லா வாழையும் என்னிடம் உண்டு. இவை தவிர சின்ன நாடன், பெரிய நாடன், பச்சை நாடன், கருவாழை, மனோரஞ்சிதம் போன்ற வாழை ரகங்களை சேலத்தை சேர்ந்த வாழைப்பிரியர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அதற்குப் பதிலாக என்னிடமிருந்து 15க்கும் அதிகமான வாழை ரகங்களை பெற்றுச் சென்றார்.

சிங்கன் வாழையில் நெய்ச்சிங்கன், தோட்டுச் சிங்கன், குதிரைவால் சிங்கன் என்று பல ரகங்கள் உண்டு. சிங்கன் வாழை தான் முதன் முதலாக நான் நட்ட ரகம். அதிலிருந்து எத்தனையோ குலைகளை வெட்டியிருக்கிறேன். ஆனால் இதுவரை நோயோ, தண்டுப்புழுவோ அவைகளை தாக்கியதில்லை.தோட்டுச் சிங்கன் தோல் சற்று தடிமனாக இருக்கும். ஒவ்வொரு வாழை ரகமும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். ஆனால் அதை எழுத்தில் வடிக்க இயலாது. சுவைத்து பார்த்தால்தான் தெரியும்.வாழைகளைப் பொறுத்தவரை பூச்சித்தாக்குதல் குறைவாக இருந்தாலும் வருமுன் காப்பதே சிறந்தது. அதனால்தான் வேப்பெண்ணெயில் பார்சோப் கலந்து அதை வாழைத்தண்டுகளில் அடித்து வருகிறேன். இதனால் தண்டுப்புழுக்களை நாம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். குந்தம் சாடுவது, குருடு பாய்வது போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாது. வாழைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுகிறேன். மழைக்காலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. நடவு செய்த தாய் வாழையில் இருந்து கன்றுகள் வருவதால், தற்போது பெரும்பாலான வாழைகள் சுமார் 15 அடி உயரத்திற்கு நிற்கிறது.

இத்தனை மரங்களில் இருந்து கிடைக்கிற பழங்களை நான் காசுக்கு விற்பதோ அல்லது சந்தைப்படுத்துவதோ கிடையாது. வீட்டு உபயோகத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இலவசமாக கொடுத்து விடுவேன். மனதிருப்திக்காகத்தான் இவ்வளவு ரகங்களை வளர்த்து வருகிறேன். மொந்தன் என்றொரு வாழை உண்டு. அதிலும் சாம்பல் மொந்தன் மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தது. பழங்காலங்களில் ஒவ்வொரு வீட்டுக்கு பின்புறமும் ஒரு மொந்தன் வாழை இருக்கும். கழிவுநீரை எல்லாம் அந்த வாழைக்கு ஊற்றுவார்கள். அது இப்போது இல்லாமல் போய்விட்டது. மொந்தன் வாழைப்பழத்தில் இரவில் வெந்தயத்தை வைத்து விடியற்காலையில் வெறும் வயிற்றில் அதை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்லாமல் வயிற்றுக்குள் இருக்கும் அழுக்குகளையும் அது சுத்தமாக்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. நம் நாட்டில் பல்வேறு ரக வாழைகள் விளைகின்றன. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குமரி மாவட்டத்திலும் வாழைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்ட ஏராளமான மருத்துவக் குணமிக்க வாழை ரகங்கள் இருந்தன. ஆனால் போதிய பராமரிப்பின்மை மற்றும் செயற்கைச் சூழல்களால் அவை அழிந்தன. மருந்துக் கதலி எனப்படும் நெய்க்கதலி மேரை, ஆனைக்கொம்பன் போன்ற ரகங்கள் அழியும் நிலையில் உள்ளன. வீட்டுக்கு ஒரு வாழைமரம் வளர்த்தால் ஆரோக்கியத்துக்கு அதுவே சிறந்தது’’ என்கிறார் ஜே.ேஜா.பிரகாஷ்.
தொடர்புக்கு:
ஜே.ஜோ.பிரகாஷ். 93842 59435

The post இந்தியா முதல் இந்தோனேசியா வரை 49 ரக வாழைகளைப் பயிரிடும் குமரி விவசாயி appeared first on Dinakaran.

Tags : Kumari ,India ,Indonesia ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...