×

கொடைரோடு பள்ளபட்டி அருகே உணவின்றி உருக்குலைந்த மாற்றுத்திறனாளி தம்பதிகளின் குழந்தைகள் தவிப்பு

*அரசு அதிகாரிகள் மீட்டனர் * தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

நிலக்கோட்டை : கொடைரோட்டை அடுத்த பள்ளபட்டி குல்லலக்குண்டு கிராமத்தில், வருமானமின்றி தவித்த மாற்றுத்திறனாளி தம்பதிகளின் குழந்தைகளுக்கு, போதிய உணவு வழங்க முடியாத நிலை உருவானது. இதனால் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த அவர்களை சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டனர். அப்போது தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டையை அடுத்த பள்ளப்பட்டி அருகே உள்ளது குல்லலக்குண்டு கிராமம். இங்கு நாகராஜ் – தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர், இருவரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள். இருவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும் மற்றும் ஆறு மாத கைக்குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் போனதாக தெரிகிறது. இதன் காரணமாக இவர்களால் குழந்தைகளை சரிவர பராமரிக்க முடியாமல் போனது. இதனால் போதிய சரிவிகித உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் குழந்தை நோய்வாய்ப்பட்டு மெலிந்து ஆபத்தான நிலையில் இருந்து. அதேபோல் பிறந்தபோது மூன்று கிலோ எடை இருந்த இரண்டாவது குழந்தை ஆறுமாதமாக போதிய உணவு இன்றியும், தாய்ப்பால் இன்றியும் போனதால் எடை குறைந்து உடல் மெலிந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி புஷ்பகலா, குழந்தைகள் நல அலுவலர் சிவகுமார், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரு குழந்தைகளையும் மீட்டனர்.

அப்போது, குழந்தைகளை அவர்களிடம் கொடுக்க மறுத்த தந்தை, குழந்தைகள் உட்பட அனைவர் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர், அவரிடமிருந்து குழந்தைகளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கொடைரோடு பள்ளபட்டி அருகே உணவின்றி உருக்குலைந்த மாற்றுத்திறனாளி தம்பதிகளின் குழந்தைகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallapatti ,Kodairod ,Nilakottai ,Gullalakundu ,
× RELATED நிலக்கோட்டை சக்கையநாயக்கனூரில்...