×

தமிழக மீனவர்களை தாக்கி ரூ.7 லட்சம் பொருட்கள் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

*நாகை அருகே பரபரப்பு

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச் சேர்ந்த வடுகநாதன் (25), தியாகராஜன் (40), ரஞ்சித் (30), ராஜேந்திரன் (55) ஆகிய 4 பேரும் கடலுக்கு சென்றனர். மேலும் ஆறுகாட்டுதுறையை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரை சேர்ந்த சிவகுமார் (40), அருண்குமார் (25), கோவிந்தசாமி (55), செல்லமணி (40), மணிமாறன் (40), ஆகிய 5 பேரும், மேலும் ஆறு காட்டுத் துறையை சேர்ந்த வடுகநாதன் என்பதற்கு சொந்தமான படகில் கதிரவன் (40), கல்யாண சுந்தரம் (40), வடுகநாதன் (48), ஆகிய 3 பேரும், வானவன் மகாதேவியை சேர்ந்த சிவலிங்கம் (32) ரன்சன் (18), ராமையன் (55), ராஜா (45) ஆகிய 4 பேரும், துரை (38) என்பவருக்கு சொந்தமான படகில் காளியப்பன் (50), குப்புசாமி (60) உள்ளிட்ட 19 மீனவர்கள் 5 பைபர் படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் வந்த 6 இலங்கை கடற் கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் படகை வழிமறித்து கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி தாக்கி உள்ளனர்.

மீனவர்கள் படகில் வைத்திருந்த 4 செல்போன்கள், 5 ஜிபிஎஸ் கருவி, பேட்டரிகள், 500 கிலோ மீன், 30 லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு விரட்டி அடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வெறுங்கையுடன் ஆற்காட்டுதுறை மற்றும் வாணவன்மகாதேவி கடற்கரைக்கு நேற்று வந்தனர். அவர்களிடம் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் உள்ளிட்ட உளவு துறையினர் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் 19 மீனவர்களுக்கும் உள்காயம் ஏற்பட்டது. இதில் சிவலிங்கம் என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த மீனவர்கள் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்லவில்லை. இந்த கொள்ளை சம்பவத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சமடைந்துள்ளனர்.

The post தமிழக மீனவர்களை தாக்கி ரூ.7 லட்சம் பொருட்கள் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Arukatuthurai ,Nagai District Vedaranyam ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில்...