×

அஞ்சுகிராமம் அருகே பரிதாபம் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை

*கடிதத்தில் உருக்கமான தகவல்

அஞ்சுகிராமம் : குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு எழுதப்பட்ட கடிதத்தில் உருக்கமாக தகவல் தெரியவந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அனிதா (45). சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலிகா (16) ஆகிய மகள்களும் உண்டு.

இந்த குடும்பத்தினர் கோவையில் வசித்துவந்த நிலையில், ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். எனவே அங்கு ஆதரவின்றி தவித்த அனிதா மற்றும் 2 மகள்களும் தங்களது சொந்த ஊருக்கே வந்து விட்டனர். சகாய திவ்யா இங்குள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரியான சகாய திவ்யா, தான் இதற்கு முன்பு படித்த பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். சகாய பூஜா மவுலிகா அழகப்பபுரம் பகுதியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கணவர் இறந்த சோகம் மற்றும் கவனிக்க ஆள் இல்லாததால் அனிதா மிகவும் மன வருத்தத்துடன் இருந்து உள்ளார். இதனாலேயே அடிக்கடி நோய்வாய்ப்பட்டுள்ளார்.

பல மருத்துவமனைகளில் சிகிச்சையும் எடுத்து வந்தார். ஒருகட்டத்தில் நோய் தீவிரமானதால் எங்கே நாம் இறந்துவிடுவோமோ என்று அனிதா பயந்துள்ளார். தான் இறந்துவிட்டால் தனது 2 மகள்களையும் கவனித்துக்கொள்ள யாரும் முன்வரமாட்டார்கள் என மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் அனிதாவின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. எப்போதும் காலையிலேயே அனிதா விழித்துக்கொண்டு வாசல் தெளிக்க வெளியே வருவார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல்தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் யாரும் திறக்கவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு , ஒரு அறையில் அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.வீட்டின் முன்பு குவிந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் அனிதா மற்றும் அவரது 2 மகள்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். தற்கொலை செய்த அறையில் அனிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே நான் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளேன்.

ஒருவேளை நான் தற்கொலை செய்துவிட்டால் எனது மகள்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அனாதையாக இருக்கும் மகள்களை கவனிக்க யாரும் வரமாட்டார்கள். எனவே நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்கிறோம் என உருக்கமாக எழுதியிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 2 மகள்களுடன், தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஷம் குடித்தார்களா?

3 பேரும் தூக்கில் தொங்கிய அறையில் எலி மருந்துகளும், தூக்க மாத்திரைகளும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. எனவே 3 பேரும் முதலில் தூக்கமாத்திரையை சாப்பிட்டோ அல்லது எலி மருந்தை குடித்துவிட்டோ தூக்கிட்டு தற்கொலை செய்தார்களா? என்ற விவரம் பிரேத பரிசோதனை செய்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post அஞ்சுகிராமம் அருகே பரிதாபம் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Anjugramam ,Anjugram ,Anjugram, Kumari district.… ,
× RELATED அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில்...