×

பள்ளி, கல்லூரி நேரங்களில் மண்ணச்சநல்லூர் வழியாக கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுமா? மாணவர்கள் படியில் தொங்கி செல்லும் அவலம்

 

சமயபுரம், ஆக.11: மண்ணச்சநல்லூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதை தடுக்க கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்ணச்சநல்லூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், அரசு வழங்கக் கூடிய இலவச பேருந்து பயண அட்டை மூலம் 20 கி.மீ தூரம் அரசு பேருந்தில் பயணித்து, மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு பள்ளி, கல்லூரியில் படித்து வருகின்றனர். திருப்பைஞ்ஞீலீ, மூவானூர், வாழ்மால்பாளையம் போன்ற பகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சாலை வழியாக திருச்சி வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில், அரசு பேருந்து குறைந்த அளவில் இயக்கப்படுவதால் அப்பகுதி மாணவர்கள், வேறு வழியில்லாமல், பேருந்தின் படியில் தொங்கியபடி பயணிக்கும் அவல நிலை உள்ளது. இது மாதிரியான ஆபத்தான பயணங்களை, போக்குவரத்துதுறை கண்டு கொள்ளாததால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளி கல்லூரி நேரங்களில் மேற்கண்ட பகுதிகளிலிருந்து கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளி, கல்லூரி நேரங்களில் மண்ணச்சநல்லூர் வழியாக கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுமா? மாணவர்கள் படியில் தொங்கி செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Manchanallur ,Samayapuram ,Mannachanallur ,Dinakaran ,
× RELATED மண்ணச்சநல்லூரில் ரூ.38 லட்சம் செலவில்...