×

வெண்பேடு கிராமத்தில் 60 ஆண்டு ஆலமரம் வேரோடு பிடுங்கி பூங்காவில் மறுநடவு

திருப்போரூர், ஆக.11: திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் 60 ஆண்டு ஆலமரத்தை வேரோடு பிடுங்கி மறுநடவு செய்யப்பட்டது. திருப்போரூர் ஒன்றியம், வெண்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சில நாட்களாக விவசாயம் நடைபெறாத நிலையில் வீட்டு மனைப்பிரிவாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிலத்தில் சுமார் 60 ஆண்டுகால ஆலமரம் ஒன்று வளர்ந்து இருந்தது. இந்த ஆலமரத்தை ெவட்டி வீழ்த்த விரும்பாத அந்த தனியார் நிறுவனத்தினர் பசுமைத்தாயகம் அமைப்பின் உதவியோடு ஆலமரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையின் ஆலோசனை பெறப்பட்டது. நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆலமரத்தை சுற்றிலும் பெரியபள்ளம் தோண்டப்பட்டது. முன்னதாக ஆலமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு பிரதான மரம் மட்டும் இருக்கும் வகையில் மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிரேன் உதவியுடன் ஆலமரம் பெயர்த்து எடுக்கப்பட்டு சிறிது தூரம் தள்ளி இருந்த பூங்கா ஒன்றில் காலியாக இருந்த இடத்தில் நடப்பட்டது. ஆலமரத்தை முழுவதும் வெட்டித்தள்ளாமல் அதை வேரோடு பிடுங்கி மறுநடவு செய்ய எடுத்த முயற்சியை கிராம மக்கள் பாராட்டினர்.

The post வெண்பேடு கிராமத்தில் 60 ஆண்டு ஆலமரம் வேரோடு பிடுங்கி பூங்காவில் மறுநடவு appeared first on Dinakaran.

Tags : Venpedu village ,Tiruporur ,Tiruporur Union ,Dinakaran ,
× RELATED புதுப்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்