×

தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்திற்கு முன்கூட்டி இருப்பு வைக்கப்படும் டிஏபி உரம் யூரியாவும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவில்பட்டி, ஆக. 11: தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்திற்கு முன்கூட்டி இருப்பு வைக்கப்படும் டிஏபி உரம் போல யூரியா உரமும் தட்டுப்பாடின்றி இருப்பு வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் எக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. ஆவணி கடைசி வாரம் பருத்தி, மக்காச்சோளம் விதைகள் ஊன்றுவார்கள். புரட்டாசி முதல் வாரத்தில் உளுந்து, பாசி, வெள்ளைச் சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய், சூரியகாந்தி, கடைசி பட்டமாக கொத்தமல்லி பயிரிடப்படும். கடந்த காலங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடை சாணங்களை நிலங்களில் போட்டு உழவு செய்து பயிர் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டதால் நிலங்களில் விதைப்பு செய்வதற்கு முன்னர் அடி உரமாக டிஏபி உரம் ஏக்கருக்கு 50 கிலோ வீதம் பயன்படுத்துகின்றனர். இதனால் ரசாயன உரமின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு ரசாயன உரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த உரங்கள் மங்கள், கிரிப்கோ, இப்கோ, ஸ்பிக், விஜய் போன்ற தனியார் உரக் கம்பெனிகளால் தயாரிக்கப்படுகிறது.

சில சமயங்களில் மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் உரம் தட்டுப்பாடாகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியாவிற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அரசு முன்கூட்டியே உரம் தேவைப்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிடம் வேண்டிய உரம் விவரங்களை பெற்று கடந்த 4 நாட்களாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேவையான அளவு டிஏபி உரத்தை வழங்கி வருகிறது. விலையும் கடந்த ஆண்டை போலவே ஒரு மூட்டை ₹1350க்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் டிஏபி உரம் வந்துள்ளது. இதனால் இந்தாண்டு உரத்தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர். இவை தவிர அடி உரம் டிஏபி முன்கூட்டி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதுபோல பயிர்கள் முளைத்து நன்கு வளர்ந்து வரும் நிலையில் மணிப்பிடிப்பு சமயத்தில் பயிர்களுக்கு இடப்படும் யூரியா உரமும் தட்டுப்பாடின்றி இருப்பு வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்திற்கு முன்கூட்டி இருப்பு வைக்கப்படும் டிஏபி உரம் யூரியாவும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Kovilpatti ,Puratasi ,Tuticorin district ,Dinakaran ,
× RELATED திருச்சி தேசிய அறிவியல் மாநாட்டிற்கு...