×

கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகரிப்பு

திருச்செங்கோடு, ஆக.11: திருச்செங்கோடு வேளாண் உதவி இயக்குனர் லோகநாதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு வட்டாரத்தில், தற்சமயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பில் வெண்புழுவின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய வறட்சியான காலங்களில், கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். மழை பெய்தவுடன் வெண்புழுவின் தாய் வண்டுகள் அருகிலுள்ள வேப்ப மரத்திற்கு இடம் பெயர்ந்து விடும். இப்புழு மண்ணுக்குள் 65 நாட்கள் வரை இருந்து பயிருக்கு சேதத்தை ஏற்படுத்த கூடியது. இதனால் கரும்பு பயிர் வாடியும், பக்கவாட்டில் இலைகள் காய்ந்து மஞ்சளாக மாறியும் காணப்படும். நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல்இருக்காது.

வெண்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு குத்துக்கு 2 முதல் 5 புழுக்கள் வரை இதன் பாதிப்பு தென்பட்டால் ஊடுருவி பாயும் ரசாயன பூச்சிக்கொல்லிகளான குளோர் பைரிபாஸ் எக்டருக்கு 1 லிட்டர் (அ) இமிடாகுளோபிரிட் 40 டபள்யுஜி குருணை (அ) பிப்ரோனில் 40 குருணை எக்டருக்கு 200 கிராம் என்ற அளவில் 200 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இப்புழு வரும் முன் பயிரை காப்பாற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏற்கனவே பாதிப்பு தென்பட்ட வயல்களில், வேப்பம் புண்ணாக்கு இட்டும் பயிர் சுழற்சி முறைகளை கடைபிடித்தும் வெண்புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம். அனைத்து விவசாயிகளும் கூட்டு முயற்சியாக ஒரே சமயத்தில், மேலாண்மை முறைகளை கடைபிடித்தால், இப்புழுவின் தாக்குதலை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Assistant Director ,Loganathan ,
× RELATED மரங்களில் வெள்ளை ஈக்கள் பாதிப்பு: வேளாண்துறை ஆலோசனை