×

மாவட்டத்தில் ₹28 கோடியில் தடுப்பணை, ஏரி, குளங்கள்

தர்மபுரி, ஆக.11: தர்மபுரி மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம், நடப்பாண்டு 505 பணிகள் ₹28 கோடியில் தடுப்பணை கட்டுதல், ஏரி, குளம் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு பாதாள குழிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சேகரிப்பை ஊக்குவித்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு ‘ஜல் சக்தி அபியான்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. தர்மபுரி மாவட்டத்திலும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தின் கீழ், நகர்ப்புற நீர் சேமிப்புக்கான வழிகளை வெளியிட்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் மழை நீரை சேமிப்பதற்கான சிறப்பு குழு ஒன்றை அமைத்து, நிலத்தடி நீர் எவ்வளவு உறிஞ்சி எடுக்கப்படுகிறது, நிலத்தடி நீரின் நிலை குறித்து கண்காணிக்க வேண்டும் என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில் முக்கியமாக, கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதா என பார்த்த பின்னரே, கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கப்படும்.

கட்டுமான பணி முடிந்த பின்னர், மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே, கட்டிடத்திற்கான சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம், நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. ஏரி, குளம், தூர்வாரப்படுகிறது. பொதுப்பணித்துறையில் நீர்வளத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை ஆகிய 5 துறைகளும் இணைந்தே, நீர் ஆதாரங்களை பாதுகாப்பும், சேமிக்கவும் இடங்களை தேர்வு செய்து தடுப்பணை, தூர்வாருதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நடப்பாண்டு ₹28 கோடியில் 505 பணிகளில் 374 பணிகள் முடிந்துள்ளன. 131 பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. ₹5.35 கோடியில் 80 பணிகள் முடிந்துள்ளன. 9 பணிகள் நடந்து வருகின்றன. ₹2.46 கோடியில் 31 குளம், குட்டைகளில் பணிகள் முடிந்துள்ளன. 35 குளம், குட்டை பணிகள் நடந்து வருகின்றன. அதிக மழைநீரை சேமிக்க ₹19.86 கோடியில் 248 மழைநீர் சேகரிப்பு பாதாள குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 85குழிகள் அமைக்கும்பணி நடக்கிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க ₹5.25லட்சத்தில் 13 பணிகள் முடிந்துள்ளன. ₹25.81 லட்சத்தில் நீர்வரத்து கால்வாய் 2 பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், நீர் மேலாண்மை பணிகள் மேற்கொண்டதன் மூலம், மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை (நிலத்தடிநீர்) ஆய்வில் தெரிவித்துள்ளது. தர்மபுரி, நல்லம்பள்ளி வட்டாரங்களில் 5 மீட்டர் (25அடி) அளவிலும் பென்னாகரம், பாலக்கோடு வட்டாரங்களில் 6 மீட்டர் (30 அடி) அளவிலும், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில், 35அடி அளவிலும் நிலத்தடிநீர் உயர்ந்து காணப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தின் முக்கிய ஆதாரமான, விவசாய பணிகள் மேம்படுவதின் மூலம் மாவட்ட பொது மக்களின் சமூக பொருளாதார நிலை பெரிதும் முன்னேற்றம் அடையும். மாவட்டத்தில் நடப்பாண்டு ₹28 கோடியில் தடுப்பணை கட்டுதல், ஏரி, குளம், குட்டை, ஓடை தூர்வாருதல், மரக்கன்று நடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post மாவட்டத்தில் ₹28 கோடியில் தடுப்பணை, ஏரி, குளங்கள் appeared first on Dinakaran.

Tags : Barrage ,Dharmapuri ,Jal ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழ...