×

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை தேர்தல் ஆணையர் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு இடம் இல்லை: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தலைமை நீதிபதி இல்லாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் புதிய மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுவின் பரிந்துரையின்படி ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த நியமனங்கள் தொடர்பான சட்டம் கொண்டு வரப்படும் வரை இம்முறையே தொடர வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இது தொடர்பான புதிய மசோதா நேற்று மாநிலங்களைவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய கேபினட் அமைச்சர் ஆகிய மூவரை கொண்ட குழு அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழுவின் பரிந்துரையின்படி தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை ஜனாதிபதி நியமனம் செய்வார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புதிய மசோதா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளதாக கூறி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தன.

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் தனது டிவிட்டர் பதிவில், ‘’புதிய மசோதா, தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக்கும் அப்பட்டமான முயற்சியாகும். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உருவாக்கிய குழு உள்ள போது புதிய குழு எதற்கு? பிரதமர் ஏன் தனக்கு சாதகமான தேர்தல் ஆணையரை நியமிக்க நினைக்கிறார்? இது அரசியலமைப்புக்கு எதிரானது, தன்னிச்சையானது மற்றும் நியாயமற்ற மசோதா. காங்கிரஸ் இதனை வன்மையாக கண்டிக்கிறது,’’ என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது டிவிட்டர் பதிவில், “பிரதமர் தனது தலைமையில் குழு அமைப்பதன் மூலம் தான் விரும்பியவரை தேர்தல் ஆணையராக்க முடியும். பிரதமர் மோடி அடுத்தடுத்து எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்திய ஜனநாயகத்தை பலவீனமாக்கி வருகிறது,” என்று தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, “தலைமை நீதிபதிக்கு பதிலாக தனக்கு கீழ் உள்ள அமைச்சரை நியமிப்பதன் மூலம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஏற்படுத்தி உள்ள பயத்தில், தேர்தலில் வெளிப்படையாக மோசடி செய்து வெற்றி பெறுவதற்கான பாஜ.வின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்,’’ என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் உள்ள நிலையில் அவர் பதவிகாலம் முடிவடைய உள்ளது. எனவே தான் தேர்வு குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவதில் ஆளும் ஒன்றிய அரசு அதிக அக்கறை, அவசரம் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக்கும் அப்பட்டமான முயற்சி. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

The post உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை தேர்தல் ஆணையர் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு இடம் இல்லை: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Supreme Court ,Bill ,New Delhi ,Union Government ,Election Commissioner Appointment Committee ,Parliament ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுடன் அமலாக்கத்துறை இணைந்து...