×

புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல்

சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென்மாவட்ட மக்களின் வசதிக்காக பஸ்களை இயக்கவும், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணி, 2019ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இந்த பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டால் தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் எந்த சிரமுமின்றி சென்னை வந்து செல்லலாம். மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் கிளம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயில்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், மாநில அரசு தெற்கு ரயில்வேயுடன் இணைந்து வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளம்பாக்கம் அருகே ரயில் நிலையம் அமைக்க உள்ளது.

தெற்கு ரயில்வே தலைமை அதிகாரி கூறியதாவது: ரயில்வே வாரிய கொள்கையின்படி, டெபாசிட் கால அடிப்படையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான செலவை ஏற்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மாநில அரசின் சார்பில் தொடங்கப்பட்ட சிஎம்டிஏ இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல்கட்டமாக அரசு சார்பில் ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டில் பணிகள் முடிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக சென்னை கோட்ட அதிகாரிகள் தேவையான வரைபட திட்டங்கள் உள்ளிட்ட வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான சாத்தியக் கூறு கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக தனியார் நிலத்தின் ஒரு பகுதி கையகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : railway station ,Klambach ,Southern Railway ,Chennai ,Vandalur ,Klambakan ,station ,Dinakaran ,
× RELATED கனமழை எச்சரிக்கை; நாளை மறுநாள் வரை...