×

சென்னையில் தாய் கண்முன் பதற வைத்த சம்பவம் பள்ளி சிறுமியை கொடூரமாக முட்டி தூக்கி வீசிய பசு மாடு: தலையில் 4 தையல்களுடன் சிறுமிக்கு தீவிர சிகிச்சை; மாட்டின் உரிமையாளர் அதிரடி கைது

சென்னை: சென்னையில் தாயுடன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சிறுமியை பசு மாடு ஒன்று முட்டி கீழே தள்ளி, கால்களால் மிதித்த கொடூர சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமிக்கு தலையில் 4 தையல்களுடன், உடல் முழுவதும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அஷ்ரின் பானு(28). இவரது மகள் ஆயிஷா(9). இவர் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.

இந்நிலையில் அஷ்ரின் பானு, மகள் மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மகனை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அஷ்ரின் பானு உள்ளிட்டோர், எம்.எம்.டி.ஏ காலனி, இளங்கோ தெருவில் செல்லும் போது, அவர்களின் பின்னால் கன்று குட்டியுடன் வந்த பசுமாடு ஒன்று திடீரென சிறுமியை சீற்றத்துடன் முட்டியது. இதை பார்த்த ஆயிஷாவின் தாய் தனது மகளை மீட்க போராடினார். ஆனால் மாடு தாயையும் குத்த பாய்ந்தது. இதனால் அவர் உதவி கேட்டு அலறினார். அப்போது, மாடு சிறுமியை விடாமல் தனது கால்களால் மிதித்தும், கொம்பு மற்றும் தலையால் விடாமல் முட்டி கொண்டிருந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாட்டை விரட்ட முயற்சித்தனர். ஆனால் அவர்கள் மீதும் பாயத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் சிறுமி மாட்டின் கால்களுக்கு அடியில் சிக்கி அலறி துடித்தார். அப்போது அங்கிருந்த வாலிபர்கள் கற்களை கொண்டு சராமாரியாக மாட்டின் மீது வீசினர். அப்போது மாடு சற்று விலகியதும். வாலிபர் சிறுமியை மீட்டார். ஆனால் சீற்றத்துடன் இருந்த மாடு மீண்டும் அந்த வாலிபரை துரத்தி பாய்ந்து சிறுமியை மீண்டும் தாக்கியது. ஒரு கட்டத்தில் வாலிபர் ஒருவர் தைரியமாக கட்டையால் மாட்டை சராமாரியாக தாக்கி விரட்டினார்.

அதன் பிறகே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த சிறுமியை மீட்க முடிந்தது. பின்னர் மாணவி ஆயிஷாவை ரத்த காயங்களுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டது. மேலும் சிறுமியின் உடல் முழுவதும் மாடு மிதித்ததால் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி சிறுமியை தாய் கண் முன்னே கொடூரமாக துரத்தி துரத்தி மாடு முட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை பார்பவர்கள் மனதையும் கண்கலங்க செய்கிறது. இதற்கிடையே, சிறுமியை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக, சிறுமியின் தாய் அளித்த புகாரின் படி அரும்பாக்கம் போலீசார் மாட்டின் உரிமையாளரான அரும்பாக்கம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த விக்கி(26) என்பவர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், அந்த சிறுமி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

* ஆண்டுதோறும் 50 பேர் உயிரிழப்பு
சென்னையில் வீடுகளில் அடைத்து வைத்து மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலான மாட்டின் உரிமையாளர்கள் பால் கறந்த பின்பு மாடுகளை தெருக்களில் விட்டு விடுகின்றனர். அப்படி சாலையில் சுற்றி திரியும் விலங்குகள் காரணமாக ஏற்படும் விபத்துகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை உடனுக்குடன் பிடிக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

* வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது
மாடு முட்டியதில் படுகாயமடைந்த சிறுமியின் தந்தை கூறுகையில்,‘‘தனது குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் போல வேறு குழந்தைகளுக்கு இது நடக்கக்கூடாது’’ என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வேண்டுகோள் வைத்துள்ளார்.

* கடுமையான சட்ட திருத்தம் தேவை
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாடு முட்டியதில் சிறுமி ஒருவர் காயமடைந்தார். அந்த சிறுமி தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவத்தை பொறுத்தவரை சிறுமியை முட்டித் தள்ளிய மாட்டை பிடித்து வைத்திருக்கிறோம். மாடு கண்காணிப்பில் இருக்கிறது. ஒருவேளை அதற்கு வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் கால்நடை பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்படும். மாட்டின் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் நலச் சங்கம் மாட்டு உரிமையாளருக்கு ஆதரவாக வந்தாலும்கூட இந்த சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் வலுவாக எடுக்கப்படும். மாநகராட்சி ஆணையர் என்பதை தாண்டி, நான் ஒரு கால்நடை மருத்துவராக சொல்கிறேன், இத்தனை ஆக்ரோஷமாக தாக்கிய மாட்டுக்கு வெறிநோய் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னையில் தாய் கண்முன் பதற வைத்த சம்பவம் பள்ளி சிறுமியை கொடூரமாக முட்டி தூக்கி வீசிய பசு மாடு: தலையில் 4 தையல்களுடன் சிறுமிக்கு தீவிர சிகிச்சை; மாட்டின் உரிமையாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...