×

மாநிலங்களவைக்கு வராமல் இருப்பதா? மோடி ஒன்றும் கடவுள் இல்லை: கார்கே காட்டம்

புதுடெல்லி: மணிப்பூர் குறித்து பேச மாநிலங்களவைககு பிரதமர் வர வேண்டும். அவர் ஒன்றும் கடவுள் இல்லை என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்தார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக,விதி எண் 267ன் கீழ் மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.அந்த விதிபடி பிரதமர் மோடி அவைக்கு வந்து,பதில் அளிக்க வேண்டும். ஆனால் இது குறித்து விதி எண் 176ன் கீழ் குறுகிய விவாதம் நடத்த தயார் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதில் வாக்கெடுப்போ அல்லது விவாதத்துக்கு அமைச்சர் யாராவது பதில் அளிப்பதற்கான அத்தியாவசியம் ஏற்படாது.

இந்நிலையில், நேற்று காலை மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து ‘‘விதி எண் 167ன் கீழ் பிரதமர் முன்னிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும்’’ என்றார். அதற்கு ஆளும் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு மல்லிகார்ஜூன கார்கே,‘‘ பிரதமர் மோடி அவைக்கு வந்தால் என்ன ஆகிவிடும். அவர் ஒன்றும் கடவுள் இல்லை’’ என்றார். இதையடுத்து ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.

மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது,‘‘ வேறு ஒரு விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு அவையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த ஜெகதீப் தன்கர் முயற்சித்தார். ஆனால் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்களும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்ததால் எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை. அதன் பிறகு மிசோரத்தை சேர்ந்த ஒரு எம்பி எழுந்து,‘‘பழங்குடியினர் மியான்மரில் இருந்து வரவில்லை என்றும் பிரிட்டிஷார் வருவதற்கு முன்னரே தான் உட்பட பழங்குடியினர் இந்தியாவில் வசித்து வருகின்றனர்’’ என தெரிவித்தார்.

ஆனால் அவர் பேசுவதற்கு அவை தலைவர் அனுமதி மறுத்தார். அவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். சிலர் அவையின் மையப்பகுதியை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அமளி ஏற்பட்டது. இந்த சமயத்தில், பார்மஸி( திருத்த) மசோதா 2023 அவையில் கொண்டுவரப்பட்டு அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைத்து ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

The post மாநிலங்களவைக்கு வராமல் இருப்பதா? மோடி ஒன்றும் கடவுள் இல்லை: கார்கே காட்டம் appeared first on Dinakaran.

Tags : Rajya ,Sabha ,Modi ,Kharke Kattam ,New Delhi ,Rajya Sabha ,Manipur ,Mallikarjuna Karke ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...