×

மகளிர் உலக கோப்பை கால்பந்து இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள்

வெலிங்டன்: மகளிர் அணிகளுக்கு இடையே 9வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதிப் பெற்றன. அவற்றில் இருந்து 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் ஸ்பெயின்-நெதர்லாந்து, 2வது காலிறுதியில் ஜப்பான்-சுவீடன் அணிகள் களம் காணுகின்றன.

தொடர்ந்து நாளை நடக்கும் 3வது காலிறுதியில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் அணிகளும், 4வது காலிறுதியில் இங்கிலாந்து-கொல்மபியா அணிகளும் மோத உள்ளன. இவற்றில் வெற்றி பெறும் அணிகள் ஆக.15, 16ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதியில் விளையாடும். இறுதி ஆட்டம் ஆக.20ம் தேதி நடைபெறும். எனவே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மகளிர் உலக கோப்பையில் இனி வரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர் நெதர்லாந்து-ஸ்பெயின்
* இதுவரை இந்த 2 அணிகளும் 5முறை சர்வதேச ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் ஸ்பெயின் 3 ஆட்டங்களிலும், நெதர்லாந்து 2 ஆட்டத்திலும் வென்றுள்ளன.

* ஸ்பெயின் மகளிர் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் ஜப்பானிடம் தோல்வியை சந்தித்தனர். எஞ்சிய 4 ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டரிகா, வியட்னாம் அணிகளை வீழ்த்தி உள்ளனர்.

* நெதர்லாந்து மகளிர் அணி கடைசியாக விளையாடி 5ஆட்டங்களில் 4ல் தென் ஆப்ரிக்கா, வியட்னாம், போர்ச்சுகல், பெல்ஜியம் அணிகளை வீழ்த்தி உள்ளது. ஒரு ஆட்டத்தில் அமெரிக்கவுடன் டிரா செய்திருக்கிறது.

ஜப்பான்-சுவீடன்

* இந்த 2 அணிகளும் இதுவரை 8 சர்வதேச ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 4 ஆட்டங்களில் ஜப்பான் மகளிரும், 2ஆட்டங்களில் சுவீடன் மகளிரும் வென்றுள்ளனர். எஞ்சிய 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

* ஜப்பான் அணி தான் கடைசியாக விளையாடி 5 ஆட்டங்களிலும் நார்வே, ஸ்பெயின், கோஸ்டரிகா, ஜாம்பியா, பனாமா மகளிர் அணிகளை வென்றுள்ளது.

* கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் சுவீடன் ஒரு ஆட்டத்தில் மட்டும் அமெரிக்காவிடம் டிரா செய்தது. எஞ்சிய 4 ஆட்டங்களில் அர்ஜென்டீனா, இத்தாலி, தென் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ் அணிகளை சாய்த்துள்ளது.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Women's World Cup ,Wellington ,9th FIFA Women's World Cup ,Australia ,New Zealand ,Dinakaran ,
× RELATED அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன்...