×

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-க்கான முன்னோட்ட அறிமுக விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-க்கான முன்னோட்ட அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடிற்கான இலச்சினை வெளியிடபட்டது.

இலச்சினையை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவத:
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், நாம் நடத்த இருக்கின்ற மாபெரும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் பிரம்மாண்டத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024 ஜனவரி மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்படவுள்ளது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த சிறப்பான முன்னெடுப்பைச் செய்துள்ள தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைப்புக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டுப் பெரு நிகழ்வுக்கான இலச்சினையை உலகுக்கு அறிமுகப்படுத்தவும், முன்னோட்ட அறிமுக விழாவை நடத்தவும், நாம் இங்கே கூடியுள்ளோம். 1996-2001-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான், தமிழ்நாட்டினுடைய தொழில் துறை மாபெரும் புரட்சியை அடைந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேடியும், நாடியும் வந்தது.

இன்றைய தினம் சென்னையைச் சுற்றி காஞ்சிபுரத்துக்கோ – சோழிங்கநல்லூருக்கோ திருபெரும்புதூருக்கோ ஒரகடத்துக்கோ நீங்கள் சென்றால், பார்க்கக் கூடிய பல தொழிற்சாலைகள், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவைதான். அப்போது, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை அடைந்தது. இது தொடர்பாக, ஆங்கில வர்த்தக நாளிதழ்கள் முதலமைச்சர் கலைஞரைப் பாராட்டி எழுதினார்கள்.

அப்போது இன்னொரு கருத்தையும் சொன்னார்கள். “தமிழ்நாடுதான் முதலிடத்திற்கு வந்திருக்க வேண்டும். நிறுவனங்களை அதிகம் ஈர்த்த தமிழ்நாடு, அதனை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான். இரண்டாம் இடம் வழங்கப்பட்டது” என்று எழுதினார்கள். அதாவது தொழில்களை ஈர்ப்பது மட்டும் முக்கியம் கிடையாது! அப்படிப் பல்வேறு தொழில்களை ஈர்த்திருக்கோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அந்த வகையில், இந்த நிகழ்ச்சி மிகுந்த தேவையான ஒன்று. முதலீடுகள் சாதாரணமாக வந்துவிடாது. ஒரு ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் மீது மரியாதை இருக்கவேண்டும். அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். சட்டம், ஒழுங்கு முறையாக இருக்கவேண்டும். இவ்வளவும் இருந்தால்தான் முதலீடுகள் செய்ய முன்வாருவார்கள்.

2021-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது என்றால், இந்த மாற்றங்களின் காரணமாகத்தான். தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்கள் மிகத் திறமையாக இந்தத் துறையை வழிநடத்தி வருகிறார். அவர் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது அவருக்கு நான் வைக்கக்கூடிய டெஸ்ட்! எந்த டெஸ்ட் வைத்தாலும், அவர் “பர்ஸ்ட்” வருவார். அத்தகைய வேகம் கொண்டவர் அவர். செயல்தான் சிறந்த சொல் என நம்புகிறவன் நான். தொழில்துறையும் அப்படியே செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய செயல்கள் நமக்காக பேசும்படி நீங்கள் உங்கள் சாதனைகளை தொடரவேண்டும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றிடும் விதமாக, 2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில், 241 முதலீட்டுக் கருத்துருக்கள் மூலம், 2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். 4 இலட்சத்து 15 ஆயிரத்து 282 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்கின்ற விதமாக, தமிழ்நாட்டினுடைய பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 2024 ஜனவரியில் நடத்தவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, “இதுவரை இவ்வாறு எங்குமே நடந்ததில்லை” என்று பார் புகழும் அளவுக்கு நடத்தவேண்டும். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், இலட்சம் கோடி ரூபாய் பல முதலீடுகள் ஈர்க்கப்படும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும். நமது மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சியடையும். அதற்கான இலச்சினையை வெளியிடுவதில் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

“த” என்ற எழுத்து, தமிழ் எழுத்தின் அடையாளப் பிரதிபலிப்பாக இந்த இலச்சினையை நாங்கள் வடிவமைத்திருக்கிறோம். நமது தாய்த்தமிழ் மொழிதான், தமிழ்நாட்டைத் தாங்கிடும் தூண். எனவேதான், இந்த “த” இடம் பெற்றுள்ளது. இலச்சினையே நமது இலக்கை காட்டுவதாக அமைந்திருக்கிறது. மேலும், இங்கே வந்திருக்கக்கூடிய தொழில்துறை கூட்டமைப்பினர் அனைவரும் தமிழ்நாட்டின் Brand Ambassador-ஆக மாறி, முன்னணி நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்கவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள். உங்களைத் தமிழ்நாடு வருக! வருக! என வரவேற்கிறது.

முதலீட்டின் மூலமாக தமிழ்நாடும் வளரும். உங்களது நிறுவனமும் வளரும். இந்திய அளவில், தொழில் புரிவதற்கான மிகச் சிறந்த சூழலமைப்பு கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நம்பகமான உயர்தர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சூழலை தமிழ்நாடு கொண்டுள்ளது. உங்கள் தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடம் தமிழ்நாடுதான். எனவே, அனைத்து நிறுவனங்களையும் வருக! வருக! என அழைக்கிறேன் என முதல்வர் கூறினார்.

The post ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-க்கான முன்னோட்ட அறிமுக விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MC ,World Investors Conference 2024″ ,G.K. Stalin ,Chennai ,World Investors Conference 2024 ,Department of Industry, Investment Promotion and Commerce ,B.C. ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...