×

கூடக்கோவில் கருப்பணசாமி கோயிலில் 10ம் நூற்றாண்டு சுவாமி சிலைகள்: வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்

திருமங்கலம்: கூடக்கோவில் கருப்பணசாமி கோயிலில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேஸ்வரர் மற்றும் அய்யனார் சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே கூடக்கோவில் கண்மாய்க்கரையில் கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தகவல் கொடுத்தனர்.

இதனடிப்படையில் அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான டாக்டர் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் கூடக்கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோயிலில் உள்ள சிற்பங்கள் 10ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் என தெரியவந்தது. இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘இந்த கோயிலில் சண்டிகேஸ்வரர் மற்றும் அய்யனார் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை முற்கால பாண்டியர்கள் காலத்தில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டவையாகும்.

சண்டிகேஸ்வரர் சிற்பத்தை இரண்டரை அடி உயர பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கியுள்ளனர். தலைப்பகுதி அகன்ற ஜடாபாரத்துடன் காதுகளில் பத்திர குண்டலமும், வலது கரத்தில் மழுவும், இடது கரத்தில் மலர்செண்டும் இடம் பெற்றுள்ளது. கழுத்தில் ஆபரணமும் மார்பின் ஊடே முப்புரி நூலும், இடையில் அரையாடையும் சுகாசன கோளத்தில் அமர்ந்த நிலையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவர் விசாரசர்மர் என்றும் சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இதே போல் அய்யனார் சிற்பம் இரண்டரை அடி உயரத்தில் உட்குதிஹாசன் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

தலையில் அகன்ற ஜடாபாரத்துடன் நீண்ட காதுகளில் அணிகலன்களும், வலது கரத்தில் மலர் செண்டையும், இடது கரத்தை கீழே தொங்கவிட்டும், அரை ஆடையுடனும், இடதுகாலில் யோகப்பட்டையுடன், முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்துடன் சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு சிற்பங்களின் வடிவமைப்பை பார்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சிவன்கோயில் இருந்திருக்கவேண்டும் என தெரியவருகிறது. சண்டிகேஸ்வரர் சிற்பத்தை இருளப்பசாமியாக இப்பகுதிமக்கள் வழிபட்டு வருகின்றனர்’’ என்றனர்.

The post கூடக்கோவில் கருப்பணசாமி கோயிலில் 10ம் நூற்றாண்டு சுவாமி சிலைகள்: வரலாற்று ஆய்வாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karupanasamy Temple ,Kodako ,Thirumangalam ,Chandikeswarar ,Godako ,Madurai ,Karunasamy Temple ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...