×

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-க்கான இலச்சினையை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.8.2023) சென்னையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-க்கான முன்னோட்ட அறிமுக விழாவின்போது, 2024 ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. சமீபத்தில், நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை குறியீடு தரவரிசைகளின்படி, 80.89 புள்ளிகளுடன் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ள தமிழ்நாடு மின்னணுவியல் ஏற்றுமதியிலும் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை கொண்ட மாநிலங்களில் முதலிடத்திலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில், அகில இந்திய அளவில், இரண்டாவது இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் தொழில் புரிவதற்கு சிறந்த மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. மேலும், ஏற்றுமதித் தொழில்களுக்கான தயார்நிலைக் குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

எனவேதான், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் புதிய, விரிவாக்க, பல்முனைப்படுத்தப்படவுள்ள மற்றும் மதிப்புக் கூட்டு திட்டங்களுக்காக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து வருகின்றன. மாநிலத்தில் தொடங்கப்பட்ட புத்தொழில்களும், நன்கு வளர்ச்சி பெரும் சிறந்த சூழலமைப்பும் தமிழ்நாட்டில் நிலவுகின்றது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு உயரிய இலக்கினை நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல் பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை 4,15,282நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,97,196 கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில திட்டங்களுக்கு
ஈர்த்திடுவது அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை, மேலும் மேம்படுத்திடும் வகையில், சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீட்டினை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களை சார்ந்த தொழிலதிபர்கள், சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், விவசாயிகள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து இந்த மாநாட்டினை நிகழ்த்தவுள்ளது. அவ்வமயம், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறைகளை சார்ந்தவர்களும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் இந்த நிகழ்வை காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ”தமிழ்நாடு- உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-க்கான மாநாடு பிரத்யேக இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 கருப்பொருள் “மீள்திறனுடன், நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி” “மீள்திறனுடன், நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்பது சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் முக்கிய கருப்பொருளாகும். அதாவது, மாநிலம் முழுவதற்குமான, அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய நோக்கங்களைக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படவுள்ளது.

மாநாட்டிற்கான இலச்சினை வெளியீடு
2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முன்னோட்டமாக இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநாட்டிற்கான இலச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.

இலச்சினை விளக்கம்
“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-ன் இலச்சினையில் தமிழ், தமிழர் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை குறிக்கும் விதமாக தமிழ் எழுத்தான ‘த’ வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கணினிமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கம், நகரமயமாக்கப்பட்ட சமூகம் மற்றும் அதிவேக தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் வண்ணங்களுடன், அழகியல் கூறுகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளரும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் சிறப்புப் பணி அலுவலருமான அருண் ராய், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, இ.ஆ.ப., இந்திய தொழிற் கூட்டமைப்பின் தலைவர் ஆர். தினேஷ், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள், தொழிற்கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-க்கான இலச்சினையை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Chief Minister Municipality ,World Investors Conference 2024″ ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Department of Industry, Investment Promotion and Commerce ,B.C. G.K. Stalin ,
× RELATED 2024ம் ஆண்டில் மாவட்டத்திற்கு ரூ.128.11...