×

கரும்பு வெட்டுக்கூலி குறைக்க கோரி தாளவாடியில் விவசாயிகள் போராட்டம்: கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சத்தியமங்கலம்: கரும்பு வெட்டு கூலியை குறைக்க கோரி தாளவாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது கரும்பு வெட்டு கூலியாக டன் ஒன்றுக்கு விவசாயிகளிடமிருந்து ரூ.750 ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டுக்கூலி ரூ.480 மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே கர்நாடக மாநிலத்தை போல் கரும்பு வெட்டுக் கூலியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி மலை பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் போலீசார் உங்களது கோரிக்கைகள் சம்பந்தமாக ஆலை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் லாரிகளை தடுத்து நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தினர். இதை அடுத்து தற்போது தாளவாடி மலை பகுதியில் கரும்பு வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post கரும்பு வெட்டுக்கூலி குறைக்க கோரி தாளவாடியில் விவசாயிகள் போராட்டம்: கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thalawadi ,Satyamangalam ,Tamil Nadu- Karnataka ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை