×

கணவன் மனைவி ஒற்றுமையை அருளும் நாமம்!

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 12

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

ராக ஸ்வரூப பாசாட்யா
(ராக ஸ்வரூப பாசாட்யை நமஹ)

சதுர்பாஹு சமன்விதா எனும் நாமத்தில் லலிதாம்பிகை நாற்கரங்களோடு தோன்றி அனுக்கிரகம் செய்வதை பார்த்தோம். அந்த நாற்கரங்களும் நான்கு விதமான சேனைகள்போல செயல்படுகின்றன. இதற்கு முன்பு வேறொரு விஷயத்தைப் புரிந்துகொண்டால் இந்த நாமத்தின் உள்ளர்த்தம் புரியும். நமது மனம் அகங்காரம் என்கிற ஒற்றை நான் என்கிற மூல எண்ணத்திலிருந்து உற்பத்தி ஆகின்றது. இது எண்ணங்களாக விரிகின்றன. எண்ணங்கள் ஆசைகளாகப் பூத்து ஐம்புலன்கள் வழியே அனுபவிக்கத் துடிக்கின்றன.

இவ்வாறு அனுபவிப்பதை மனம் இதுவே நிரந்தர சுகம் எனக்கருதி அதை அப்படியே பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது. அப்படிப் பதிவு செய்து வைத்ததிலேயே எந்த சுகம் சிறந்ததாக இருக்கின்றதோ அதையே தான், மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் துடிக்கின்றது. இவ்வாறு மனம் தொடர்ந்து செய்யும் விஷயத்திற்கு பந்தம் என்று பெயர். இந்த பந்தத்தை தொடர்ந்து தக்க வைத்து அதற்கு தொடர்ச்சி கொடுப்பதற்கு வாசனை என்று பெயர்.

இந்த வாசனைகள் மீண்டும் மீண்டும் எழுந்து எழுந்து ஒரு கர்மாவிற்குப் பிறகு புதியதாக இன்னொரு கர்மாவினையும், அதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் ஒரு வட்ட சுழற்சியையும் உருவாக்கி ஒரு இடியாப்பச் சிக்கலை தோற்றுவிக்கின்றது. இப்போது மனம் என்பது வெறும் எண்ணங்களின் குவியலாகவும், வாசனைகளின் தொகுப்பாகவும் இருக்கின்றது.

இப்போது மனதிற்கு எது வேண்டும்… எது வேண்டாம்… என்று தெரியாமலேயே ஓராயிரம் உணர்வுகளையும் அந்த உணர்வுகளால் பாதிக்கப்படுவதையும் மனம் தனது வழக்கமாக்கி வைத்து விடும். இந்த சுழற்சிக்குத்தான் கர்மவினை என்று பெயர். இதில்தான் பெரும்பாலோர் மாட்டிக் கொண்டுள்ளனர். இதிலிருந்து வெளிவருவதுதான் ஜீவனின் உயர்ந்த லட்சியம்.

இவ்வாறு, கர்மவினை உருவாவதற்கும் வெளிப்படுவதற்கும் வேராக இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று ராகம். மற்றொன்று துவேஷம். அதாவது ஒன்று விருப்பு. மற்றொன்று வெறுப்பு. இந்த இரண்டின் அடிப்படையில்தான் எண்ணங்களின் அமைப்பே அமைந்துள்ளன. ஆசை, கோபம், காமம், மோகம், லோபம், மதமாச்சரியம் என்று எத்தனை பெயர் கொடுத்தாலும் மேலே சொன்ன ராகம், துவேஷம் என்கிற இரண்டு விஷயங்களுக்குள் இவை எல்லாவற்றையும் சுருக்கி விடலாம். ஒன்று விருப்பத்தினால் வெளிப்படக்கூடிய கர்மவினை. இன்னொன்று வெறுப்பினால் வெளிப்படக்கூடிய கர்மவினை.

காமம், மோகம், லோபம் இவை மூன்றும் ராகம் என்கிற விருப்பத்தினால் வெளிப்படக் கூடியது. இது கர்மவினை எனும் தளைக்குள் நம்மை கட்டும். குரோதம், மதம், மாச்சரியம் இவை மூன்றும் வெறுப்பு என்கிற துவேஷத்தினால் வெளிப்படக் கூடியது. இவை எல்லாவற்றிற்கும் மூலமாக ஆசை எனும் எண்ணமே காரணமாக உள்ளது. அதற்கும் மூலமாக நான் எனும் தடித்த எண்ணம் அகங்கார வடிவில் எப்போதும் உயிர்த்தபடி உள்ளது.

இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம். இதற்கு முன்னர் சொன்ன நாமத்தைப் பாருங்கள். உத்யத்பானு ஸஹஸ்ராபா என்கிற நாமத்தை பாருங்கள். இதில் ஆத்ம தரிசனம் என்கிற அம்பிகையின் தரிசனம் கிடைத்து விடுகின்றது. ஜீவன் தன்னையும் மீறி ஆத்ம ஸ்தானத்தில் மூழ்கித் திளைக்கின்றான். மெல்ல மனம் காணாமல் போகத் தொடங்குகின்றது. இப்படி ஒரு ஜீவனுக்கு ஆத்ம தரிசனம் கிடைத்ததற்குப் பிறகு, மேலேசொன்ன விருப்பும் வெறுப்பும், ராக துவேஷங்களும் அதனினின்று விரிந்து விரிந்து பரவும் மற்ற அனைத்து விஷயங்களும் ஜீவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.

ஏனெனில், தனக்கு மேலேயுள்ள பெருஞ் சக்தியை அவன் கண்டு விடுகின்றான். இதுவரையிலும் மேலேயுள்ள ஆசை, கோபம், மோகம், காமம் உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தும் இப்போது இதற்கு மேலேயுள்ள அம்பிகையின் கட்டுப்பாட்டில் உள்ளதையும் ஒரு ஜீவன் அறிகின்றான். இன்னொரு விதமாகச் சொன்னால் நம்மிடமுள்ள விருப்பையும், வெறுப்பையும் அம்பிகையானவள் பாசமாகவும், அங்குசமாகவும் வாங்கி தன் கையில் தரித்துக் கொண்டிருக்கின்றாள்.

நம்முடைய விருப்பம் என்கிற குதிரை அவளுடைய பாசத்தை மீறி ஓட முடியாது. நம்முடைய கோபம் என்கிற யானை அவளுடைய அங்குசத்தை மீறி ஓடமுடியாது. யானையை அடக்குவதற்கு அங்குசம் வேண்டும். குதிரையை அடக்குவதற்கு பாசம் வேண்டும். விருப்பு என்பது வேகவேகமாக தான் நினைத்ததை செயல்பட வேண்டுமென்று நினைப்பது ஆசை. ஒருவேளை நாம் நினைத்து கிடைக்கவில்லையெனில் அதை உள்ளே உள்ளே அடக்கி அடக்கி ஒரு யானை மாதிரி பெருத்த உருவமுடைய கோபமாக மாற்றிக் கொள்ளுதல். கோபம் உள்ளே அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டிருத்தல்.

இப்போது விருப்பு என்பது வெளியே ஓட எத்தனிப்பது. கோபம் என்பது உள்ளே அழுத்தி பெரும் யானை போன்று அமர்ந்திருப்பது. இப்படி வேகமாக ஓட எத்தனிப்பதால் அது குதிரைக்கு இணையாகவும், பெரும் கனத்தோடு உள்ளே இருப்பதால் யானையாகவும் சொல்லப்படுகின்றது. இந்த குதிரை அம்பாளுடைய பாசத்தினாலும், யானையானது அங்குசத்தினாலும் கட்டுப்படுகின்றது. ராகஸ்வரூப பாசாட்யா என்கிற இந்த நாமத்திலுள்ள பாசம் என்பதிலிருந்துதான் அஸ்வாரூடா என்கிற அம்பிகை ஆவிர்பவிக்கின்றாள். அஸ்வம் என்றால் குதிரை என்று பொருள்.

அம்பிகை கையில் இருக்கும் அங்குசத்திலிருந்துதான் சம்பத்கரி என்கிற யானை மீதேறி வரும் அம்பிகை ஆவிர்பவிக்கின்றாள். அஸ்வாரூடா அம்பிகையின் குதிரைப் படைத் தலைவியாகவும், சம்பத்கரி யானைப் படைத் தலைவியாகவும் விளங்குகின்றாள். நம்முடைய ஆசையும், விருப்பமும் சரியான அலைவரிசையில் கட்டுப்பாட்டில் இருந்தால் அந்தச் சக்தியே அஸ்வாரூடா. மனம் முற்றிலும் அம்பிகையின் ஆளுகைக்குள் சென்று விடும். அதேபோல கோபம் எங்கு இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று சரியான பக்குவத்திற்குள் வந்துவிட்டால் அதுவே சம்பத்கரி.

அந்த சம்பத்கரியின் அருள்வலைக்குள் அந்த ஜீவன் சென்று விடும். இந்த இரண்டு குணங்களும் இனி அந்த ஜீவனை அலைகழிப்பதோ அல்லது உளைச்சலையோ கொடுக்காது. அதுபோல எந்த தர்மம் கைக்கொண்டால் வெறுப்பு ஓய்ந்து அடங்குமோ அந்த தர்மத்தை கைக்கொள்ள வேண்டும். அதர்மத்திலிருந்து விலக வேண்டுமெனில் நல்ல தர்மத்தை கைக்கொள்ள வேண்டும். இப்படி சரியான ஆசையையும் சரியான கோபத்தையும் கைக்கொள்ள வேண்டுமென்கிற விஷயத்தை நாம் அடிப்படையாக புரிந்துகொள்ளவேண்டும். அது நம்மால் முடியுமா? அதாவது நம்முடைய மனதால் முடியுமா? இல்லை என்பதே முடிவான உண்மை.

அதை அம்பிகையின் கையில் அளித்து விட வேண்டுமென்பதே இங்கு பதில். அம்பிகையை அழைத்து நீயே வைத்துக் கொள். என்னை இயக்கு என்று வேண்டி நிற்பதே இங்கு பக்தி. என் மனதிற்கு அப்பால், எனது மனதின் அதிகாரத்திற்கு உட்பட்டதாய் வரைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையே தெளிவு. இனி மனம் அதன் இஷ்டத்திற்கு ஓடாது. இனி நம் என்கிற குதிரையின் லகான் அஸ்வாரூடா என்பவளின் கரத்தினோடு கோர்க்கப்பட்டுவிடும்.

இப்படி ஆசை வசப்பட்டு நம் மனதை அலைக்கழிக்கும் குதிரையை அடக்க அவளே அஸ்வாரூடா எனும் பெயரில் வந்து நம்மை ஆட்கொள்கிறாள். ராஜராஜேஸ்வரியின் குதிரைப்படைக்குத் தலைவியாக விளங்குபவள் இந்த அஷ்வாரூடா தேவி. இவள் ஆரோகணித்திருக்கும் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர். அபராஜிதம் என்றால் யாராலும் ஜெயிக்க முடியாதது என்று பொருள்.

லலிதாம்பிகையைப் போற்றும் ‘சக்திமஹிம்ன’ துதியில், உன் திருக்கரங்களிலுள்ள பாசத்தை யார் மனதில் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் மூவுலகங்களையும் வசப்படுத்தும் ஆற்றல் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சக்தி மிக்க பாசத்திலிருந்து உதித்தவளே அஷ்வாரூடா தேவி.

இந்த அம்பிகை தன் திருக்கரங்களில் ஸ்வர்ணத்தாலான பெரிய சாட்டையுடன் கூடிய தடியைத் தரித்தவளாகவும் பாசம் ஏந்தியும் இரு கரங்களில் ஒன்று குதிரை லகானைப் பற்றிக் கொண்டும் மற்றொன்றில் தாமரை மலரைக் கொண்டவளாகவும் காட்சியளிக்கிறாள். இந்த அன்னையின் அருள் இந்த பூவுலகில் உள்ள போகசுகங்கள் அனைத்தையும் சாதகனுக்குக் கிட்ட வைக்கும். ஆனால் அதிலேயே சாதகன் மூழ்கி விடாமலும் காக்கும்.

(சக்தி சுழலும்)

பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்

கணவன் மனைவி ஒற்றுமையை
ஓங்கச் செய்யும் நாமம்

இந்தத் தேவி கணவன்-மனைவி ஒற்றுமையை ஓங்கச் செய்பவள். வீட்டைக் காக்கும் தேவதையாகவும் போற்றப்படுகிறாள். குதிரை கட்டுப்பட்டு ஓடினால், சவாரி சுகமாக இருக்கும். கட்டுப்பாடு மீறி தலைதெறிக்க ஓடினால் தன் மேல் சவாரி செய்பவனை தலை கீழாகத் தள்ளிவிடும். அது போல் நம் ஐம்புலன்களும் கட்டுப்பாட்டுடன் சுகங்களை அனுபவிக்க வேண்டும். மீறினால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது அஷ்வாரூடா தத்துவமாகும். வாசி எனில் குதிரை. மூச்சுக் காற்று என்றும் பொருள்படும். அந்த வாசியோகம், இந்த அஷ்வாரூடா அருட்கடாட்சத்தினால் கிட்டும்.

நாமம் சொல்லும் கோயில்

இந்த நாமத்திற்கு நாம் மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுடை மாயூரநாதர் ஆலயத்தைச் சொல்லலாம். இங்கு அம்பிகை மயில் வடிவில் ஈசனை பூசித்தாள். மயில் வடிவாகவே தாண்டவமும் ஆடியதால் இதற்கு கௌரி தாண்டவம் என்று அழைக்கப்பட்டது. தனது தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்காத காரணத்தால் சிவன் பார்வதியை அங்கு அனுப்பவில்லை. ஆனால் சிவனின் பேச்சை மீறி யாகத்திற்கு பார்வதி தேவி சென்றார். அதனால் சிவன் வீரபத்திரர் அவதாரம் எடுத்து யாகத்தை நிறுத்தினார்.

தன் சொல்லை மீறி யாகத்திற்கு வந்ததால் அம்பாளை மயில் வடிவம் எடுக்கும்படி சிவன் பணித்தார். அதனால் அம்பாள் இத்தலத்திற்கு வந்து மயிலாக மாறி சிவனை நோக்கி தவமிருந்தார். சிவனும் இங்கு மயில் வடிவத்தில் வந்து அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து அவருக்கு கெளரி தாண்டவ தரிசனம் அம்பாளின் சுயரூபம் பெற அருள் செய்தார். சிவன் மயில் வடிவத்தில் வந்து அருள் செய்ததால் மாயூரநாதர் என பெயர் பெற்றார்.

காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று. சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம். கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.இத்திருத்தலத்தில்தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம் திருமுறையின் 748 முதல் 758 வரையிலான பாடல்கள் மற்றும் ஐந்தாம் திருமுறையின் 387 முதல் 397 வரையிலான பாடல்கள் பாடப்பெற்றது.

கங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும். ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு, அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடை முழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில் மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பன், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வட கரையில் வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாக்கட்டத்தில் காட்சித்தரும் சிறப்பு நிகழ்ச்சி
நடைபெறும்.

The post கணவன் மனைவி ஒற்றுமையை அருளும் நாமம்! appeared first on Dinakaran.

Tags : Arudshakti ,Adi Shakti ,Lalita Sahasranams ,Ramya Vasudevan ,
× RELATED ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்: கற்றலின் கேட்டல் நன்று!