×

நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும்கட்சிதான்; மணிப்பூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும்கட்சிதான்; மணிப்பூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

மணிப்பூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை:

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஆளும் பாஜக அரசு தயாராக இல்லை. மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு தவறியதால்தான் வன்முறை பெரிதானது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூர் வன்முறை குறித்து மாநிலங்களவையில் பிரதமர் விளக்கம் அளிக்க மாட்டார் என அவைத்தலைவர் தெரிவித்துவிட்டார் என்று திருச்சி சிவா குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும்கட்சிதான்:

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுப்பது ஆளும்கட்சி உறுப்பினர்கள்தான்; எதிர்க்கட்சிகள் அல்ல என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். யார் பக்கம் தவறு என்பதை நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டாமல் கடமை தவறிய பாஜக:

எய்ம்ஸ் கட்டடம் தாமதமாவதற்கு ஒன்றிய பாஜக அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று திருச்சி சிவா தெரிவித்தார். மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் பாஜக கடமை தவறியிருக்கிறது. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்படவே தொடங்கிவிட்டன என்றும் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுவார் என்று நம்பிக்கை:

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுவார் என்று நம்புவதாக திருச்சி சிவா தெரிவித்தார். அரசுத் தலைவர் என்ற முறையில் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து, உரையாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாஜக நுழைய முடியாத மாநிலம் தமிழ்நாடுதான்:

இந்தியாவிலேயே பாஜக நுழைய முடியாத மாநிலம்தான் தமிழ்நாடுதான். பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையாக மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். இரும்புக் கோட்டை மீது எறியப்பட்ட பட்டாணிகளைப் போல திமுக மீதான பாஜகவின் குற்றச்சாட்டு முனை மழுங்கிப் போகும் என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும்கட்சிதான்; மணிப்பூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை: திருச்சி சிவா பேட்டி appeared first on Dinakaran.

Tags : manipur ,trichy siva ,Delhi ,Paralympic Parliament ,Government of the Union ,Trichi Shiva ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...